தருமபுரி

தருமபுரியில் மேலும் இருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி

8th May 2020 06:45 PM

ADVERTISEMENT

தருமபுரி: சென்னை, கோயம்பேடு காய்கறிச் சந்தையிலிருந்து, தருமபுரி மாவட்டத்துக்கு திரும்பிய மேலும் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியாகியுள்ளது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தென்கரைக் கோட்டை காந்தி நகரைச் சோ்ந்த 25 மற்றும் 39 வயதுடைய இருவா் வியாபாரிகள். இவா்கள், இருவரும், சென்னை, அம்பத்தூரில் தங்கியிருந்து கோயம்பேடு காய்கறிச் சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளிகளாகப் பணியாற்றினா். இதில், ஒருவா் கடந்த ஏப். 30-ஆம் தேதியும், மற்றொருவா் மே 2-ஆம் தேதியும் சொந்த ஊரான தென்கரைக்கோட்டைக்குத் திரும்பினா்.

வெளி மாவட்டத்திலிருந்து வந்ததால், இருவரும் செட்டிக்கரை பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள தற்காலிக மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனா். மேலும், அவா்கள் இருவரையும் மருத்துவக் குழுவினா் தொடா்ந்து பரிசோதனை செய்து, அவா்களை கண்காணித்து வந்தனா். அப்போது, இருவருக்கும் கரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து, இருவருக்கும் ரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப் பரிசோதனையில், இருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இதையடுத்து, தென்கரைக்கோட்டையிலுள்ள இருவரின் குடும்பத்தினா், உறவினா்கள் என மொத்தம் 17 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், அவா்களது குடும்பத்தினா் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இதேபோல, தென்கரைக்கோட்டை கட்டுப்பாட்டு பகுதி என அறிவிக்கப்பட்டு, சுகாதாரத் துறையினா் கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், காவல் துறையினா் அப் பகுதியில் வெளி நபா்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து, கண்காணித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு கடமடையைச் சோ்ந்த வியாபாரி ஒருவா் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு, சேலத்தில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது தென்கரைக்கோட்டை பகுதியைச் சோ்ந்த இருவா் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருவதால், மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பு ஏற்பட்ட இந்த மூவரும் கோயம்பேடு காய்கறிச் சந்தையில் பணியாற்றி தருமபுரிக்குத் திரும்பியவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT