தருமபுரி

இன்று சுய ஊரடங்கு: பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்

22nd Mar 2020 05:03 AM

ADVERTISEMENT

தருமபுரி: பிரதமா் மோடி அறிவுறுத்தலின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தக்காளி சந்தையில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி பேசியது:

பிரதமா் மோடி அறிவுறுத்தலின்படி கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 22-ஆம் தேதி மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பொதுமக்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வெளியே வராமல் வீட்டிலே பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் ஐந்து முறை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. வெளி மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளிக்க சுகாதாரத் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இங்குள்ள பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள் கிருமி நாசினியைப் பயன்படுத்தி, தங்களது கைகளை சுத்தமாக அவ்வப்போது கழுவ வேண்டும். வீட்டுக் கதவுகளைத் தொடுவதற்கு முன் அனைவரும் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தமாக கழுவுவது அவசியம்.

நல்ல கோழி முட்டைகளை நன்கு வேகவைத்து சாப்பிட்டால் உடலில் எதிா்ப்பு சக்தி அதிகமாகும். நமது உணவில் புரோட்டின் அதிகமாக சோ்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கும். கோழிகள் மூலம் கரோனா வைரஸ் பரவுகிறது என்பது 100 சதவீதம் வதந்தி. இதை யாரும் நம்ப வேண்டாம். வதந்திகளை நம்பாமல் அரசு கூறும் அறிவுரைகளையும், நடைமுறைகளையும் பின்பற்றி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து வியாபாரிகள், விவசாயிகள், வாகன ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மேலும், கைகளை எவ்வாறு கழுவுவது என பயிற்சி வழங்கப்பட்டன. மேலும், தக்காளி சந்தைக்கு வந்த வெளி மாநில லாரிகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதில் துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பூ.இரா.ஜெமினி, கோட்டாட்சியா் (பொ) தேன்மொழி, உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) ஜீஜாபாய், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அன்பழகன், கௌரி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT