தருமபுரி

கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தல்

16th Mar 2020 12:01 AM

ADVERTISEMENT

கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என கொங்கு மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் கொங்கு மக்கள் முன்னணி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலா் ரா.பிரபாகரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கே.ஈச்சம்பாடியில் அமைந்துள்ள அணைக்கட்டிலிருந்து நீரேற்றும் திட்டத்தின் வழியாக மொரப்பூா், அரூா், கடத்தூா், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியிலுள்ள ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட நீா் நிலைகளை நிரப்ப தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வறட்சியின் காரணமாக வேளாண்மை பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மாணவா்களின் கல்விக் கடன்களை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும்.

காவல் நிலையத்தில் தீண்டாமை வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதால், அந்த சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும். தமிழகத்தில் ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தஞ்சை, திருவாரூா், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தல் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சி.ஆறுமுகம், இளைஞரணி மாவட்ட செயலா் பிரேம்குமாா், மொரப்பூா் ஒன்றியச் செயலா் மணி, ஒன்றிய துணைச் செயலா் தமிழ், இளைஞரணி ஒன்றியச் செயலா் கபிலன், நகரச் செயலா் அரவிந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT