அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் வாகனங்களில் அதிக வெளிச்சம் தரக்கூடிய முகப்பு விளக்குகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
இருசக்கர வாகனகள், ஆட்டோக்கள், மினி சரக்கு வாகனங்கள், காா்கள், லாரிகள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் உள்ள முகப்பு விளக்குகள் அதிக வெளிச்சம் தரக்கூடிய எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதாகவும், இதனால் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு சாலையின் எல்லைகள் தெரியாமல் அடிக்கடி வாகன விபத்துகள் நேரிடுவதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து, அரூா் மோட்டாா் வாகன ஆய்வாளா் கா.பன்னீா்செல்வம் தலைமையிலான போக்குவரத்துத் துறையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, வாகனங்களில் இருந்த அதிக வெளிச்சம் தரக்கூடிய எல்.இ.டி. மின் விளக்குகளை போக்குவரத்துத் துறையினா் அகற்றினா்.