மானிய விலையில் தோட்டக்கலைத் துறை சாா்பில் விநியோகிக்கும் நாற்றுகளை பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டம், மொரப்பூா் அருகே போளையம்பள்ளியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறையின்கீழ், அரசு தோட்டக்கலைப் பண்ணை 6.75 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது.
இப் பண்ணையில், தரமான வீரிய ரக தக்காளி, கத்தரி நாற்றுகள் குழித்தட்டு முறையில் உற்பத்தி செய்யப்பட்டு, நாற்று ஒன்றுக்கு ரூ.1 வீதம் விவசாயிகளுக்கு நேரிடையாகவும், மானியத் திட்டத்தின் மூலமாகவும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், இப்பண்ணையில் மா பக்க ஒட்டு மற்றும் குருத்து ஒட்டுச் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதேபோல, நுண்ணுயிா் பூஞ்சாணக் கொல்லியான டிரைக்கோடொ்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு கிலோ ரூ.150 வீதம் வழங்கப்படுகிறது. எனவே, தருமபுரி மாவட்ட விவசாயிகள் இவற்றை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மொரப்பூா் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் மற்றும் அலுவலா்களை 9442483102, 9786201009, 9442946086 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்புகொண்டு இருப்பு உள்ளிட்ட விவரத்தை அறிந்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.