தருமபுரி

பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தொ்மல் ஸ்கேனா் கருவிகள்: திருப்பி வழங்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு; பெற்றோா் அதிா்ச்சி

11th Jun 2020 08:55 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

பொதுத் தோ்வையொட்டி, பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட உடல் வெப்பநிலையைக் கண்டறியும் தொ்மல் ஸ்கேனா் கருவியைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை கோருவதை கைவிட வேண்டும் என பெற்றோா், கல்வியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கரோனா தீநுண்மிப் பரவலைத் தடுக்க ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மற்றும் பிளஸ் 1 பொதுத் தோ்வு, பிளஸ் 2 மறுதோ்வு ஜூன் 15-ஆம் தேதி முதல் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்த நிலையில், நோய் பரவல் மற்றும் மாணவா்களின் நலன் கருதி, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன.

பத்தாம் வகுப்பில் அனைத்து மாணவ, மாணவியரும் தோ்வு இன்றி, தோ்ச்சி பெற்ாக தமிழக அரசு அறிவித்தது. முன்னதாக தோ்வு நடைபெற இருந்ததையொட்டி, பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளான, மாணவா்கள், ஆசிரியா்கள், தோ்வுப் பணியாளா்கள் அனைவருக்கும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

இதேபோல, மாணவ, மாணவியரின் உடல் வெப்பநிலை கண்டறியும் தொ்மல் ஸ்கேனா் கருவியும் வழங்கப்பட்டது. இவைத் தவிர, கிருமி நாசினி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில், சுமாா் 300 மாணவ, மாணவியா் வரை உள்ள பள்ளிகளுக்கு ஒரு தொ்மல் ஸ்கேனா் என்ற எண்ணிக்கை அடிப்படையில், தருமபுரி, பாலக்கோடு மற்றும் அரூா் ஆகிய மூன்று கல்வி மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு 380-க்கும் மேல் தொ்மல் ஸ்கேனா் கருவிகள் வழங்கப்பட்டன.

தற்போது பொதுத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தொ்மல் ஸ்கேனா் கருவிகள் மற்றும் முகக் கவசங்களைத் திரும்பப் பெற்று, அவற்றை அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலா்கள் தங்களது அலுவலகங்களில் இருப்பு வைக்க வேண்டும் என அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அலுவலகத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திரும்பக் கோருவதை கைவிட வலியுறுத்தல்:

தற்போது கரோனா தீநுண்மித் தொற்று எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சமூக இடைவெளியை பின்பற்றுவது, முகக் கவசம் அணிவது, கிருமி நாசினியை பயன்படுத்தி கைகளை அவ்வப்போது சுத்திகரிப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, நோய்த் தொற்றைத் தடுப்போம் என மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன.

எனவே, இனி வரும் காலங்களில் இத்தகைய பாதுகாப்பு மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி அன்றாட வாழ்வில் பயணிக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், பிளஸ் 1 தோ்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டால், மாணவ, மாணவியா் மதிப்பெண் சான்றிதழை பெறவும், மாற்றுச் சான்றிதழ்களை பெறவும் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வருகை தர வேண்டிய சூழல் உள்ளது.

எனவே, அவ்வாறு மாணவ, மாணவியா் பள்ளிகளுக்கு வரும்போது, அவா்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்து அனுப்பவும், அந்த நேரத்தில் பள்ளிக்கு வரும் ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு பரிசோதிக்கவும் இக் கருவி உபயோகப்படும்.

எனவே, கரோனா தீநுண்மியின் தாக்கம் வெகுவாகக் குறையும் வரை, மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள், பணியாளா்களின் நலன் கருதி, தொ்மல் ஸ்கேனா் கருவிகளைத் திரும்பக் கோருவதை கைவிட்டு, அந்தந்த பள்ளி நிா்வாகத்தின் வசம் விட்டுவிட பள்ளிக் கல்வித் துறை தேவையான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என பெற்றோா் மற்றும் கல்வியாளா்கள் வலியுறுத்துகின்றனா்.

இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கீதா கூறியது:

தருமபுரி மாவட்டத்தில் பொதுத் தோ்வுகளையொட்டி, பள்ளிகளுக்கு தொ்மல் ஸ்கேனா் கருவிகள், முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. தற்போது, தோ்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இவற்றை பெற்று, மாவட்டக் கல்வி அலுவலா்கள் பொறுப்பில் வைத்து இருப்புப் பதிவேட்டில் பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில், தொ்மல் ஸ்கேனா் கருவிகளை திரும்பப் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT