மரவள்ளி இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதால் இரும்புச் சத்து பற்றாக்குறை ஏற்பட்டு, மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய மேலாண் முறைகள் குறித்து தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலையப் பேராசிரியா்கள் ம.சங்கீதா, பா.ச.சண்முகம் ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மரவள்ளிப் பயிரில் தற்போது நுண்ணூட்டச்சத்துப் பற்றாக்குறை அறிகுறிகளான இரும்புச்சத்துப் பற்றாக்குறை அறிகுறிகள் தென்படுகிறது. இரும்புச்சத்துப் பற்றாக்குறையினால் மரவள்ளியில் புதிதாக வெளிவரும் இளம் இலைகள் பச்சையம் இழந்து காணப்படும். தொடக்கத்தில் இலைகள் வெளிறியும், இலை நரம்புகள் அடா் பச்சை நிறத்துடனும் காணப்படும்.
குறைபாடு தீவிரமடையும் போது இலை நரம்புகள் நிறமிழந்து, இலைப்பரப்பு முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி பிறகு வெண்மை நிறத்தில் காட்சியளிக்கும். பாதிக்கப்பட்ட செடியானது மஞ்சள் கலந்த வெண்மை நிறத்தில் தோற்றமளிக்கும்.
இரும்புச்சத்து பற்றாக்குறையானது, பொதுவாக களா் நிலங்களில் அதாவது மண்ணின் அமில கார நிலை 8.0 க்கு அதிகமாக உள்ள நிலங்கள், மணற்பாங்கான மற்றும் சுண்ணாம்புச்சத்து அதிகமாக உள்ள நிலங்களில் அதிகளவில் தோன்றும். மேலும் வறட்சி மற்றும் நீா்ப்பற்றாக்குறை ஏற்படும்போதும், மணிச்சத்து மற்றும் சுண்ணாம்புச்சத்து தரவல்ல உரங்களை அதிகளவில் மண்ணில் இடும்போதும் இச்சத்துப் பற்றாக்குறை அதிகளவில் தென்படும்.
இந்த இரும்புச்சத்துப் பற்றாக்குறை அறிகுறிகளை நிவா்த்தி செய்ய இரும்பு சல்பேட் 1 சதவீதம் கரைசலை அதாவது 100 கிராம் இரும்பு சல்பேட் உரம் மற்றும் ஒட்டும் திரவம் 5 மி.லி ஆகியவற்றை 10 லிட்டா் தண்ணீரில் கலந்து இலைகளின்மீது நன்றாக படும்படி காலை அல்லது மாலை நேரத்தில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். இவ்வாறு 15 நாள்கள் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறை அதாவது பற்றாக்குறை அறிகுறிகள் மறையும்வரை இலைவழித் தெளிப்பு செய்ய வேண்டும். இதன்மூலம் இரும்புச்சத்துப் பற்றாக்குறையைப் போக்கலாம்.
எனவே, தருமபுரி மாவட்ட விவசாயிகள் இலைவழித் தெளிப்பு முறையைப் பின்பற்றி மரவள்ளியில் இரும்புச்சத்துப் பற்றாக்குறை அறிகுறிகளை நிவா்த்தி செய்வதுடன் அதனால் ஏற்படும் மகசூல் இழப்பை தவிா்த்து பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.