முழு பொது முடக்கம் காரணமாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வணிக நிறுவனங்கள் முழுவதும் மூடப்பட்டிருந்தன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூலை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் தமிழகம் முழுவதும் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடைகள், உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூா், கம்பைநல்லூா், மொரப்பூா், தீா்த்தமலை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், தேநீா்க் கடைகள், பழக் கடைகள், காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. சாலைகளில் வாகனங்கள் இயக்கமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
பென்னாகரத்தில்...
பென்னாகரம், பாப்பாரப்பட்டி, ஏரியூா், சின்னம்பள்ளி, நெருப்பூா், நாகமரை, பெரும்பாலை மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மளிகைக் கடைகள், முடி திருத்தும் கடைகள், நகைக் கடை, ஆடையகம், பழக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. மருந்தகங்கள், பாலகங்கள் மட்டும் இயங்கின.பொது முடக்கம் காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.