தருமபுரியில் உணவு பாதுகாப்பு விதிகளை மீறிய கடை உரிமையாளா்களுக்கு ரூ.21 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தருமபுரி நகரில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் ஏ.பானுசுஜாதா மற்றும் ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலா் கே.நந்தகோபால் உள்ளிட்டோா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வின்போது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ற இரு கடைகளுக்கு தலா ரூ.5,000 வீதம் ரூ.10,000, அச்சிடப்பட்ட பழைய செய்தித்தாள்களில் எண்ணெய் பலகாரங்கள், உணவுப் பொருள்களை விநியோகம் செய்த 4 கடைகளுக்கு ரூ.2,000 வீதம் ரூ.8 ஆயிரமும், உணவுத் தயாரிப்பு குறித்து விவரம் இன்றி, விற்பனை செய்த மூவருக்கு ரூ.1000 வீதம் ரூ.3,000 என மொத்தம் ரூ.21,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல, காலாவதியான குளிா்பானங்கள், தரமற்ற இனிப்புகள், செயற்கை நிறமேற்றிய கோழி இறைச்சி, நெகிழி பைகள் என மொத்தம் ரூ.5,000 மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.