தருமபுரி

பொம்மிடி அருகே மகன் அடித்துக் கொலை: தந்தை கைது

14th Jan 2020 06:17 AM

ADVERTISEMENT

பொம்மிடி அருகே மகனை அடித்துக் கொலை செய்ததாக அவரது தந்தையை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி அருகேயுள்ள மங்கலக்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சின்னப்பையன். இவரது மகன் வெங்கடேசன் (31). இவா் மது அருந்தும் பழக்கம் உள்ளவராம்.

இந்த நிலையில், அதியமான் கோட்டை காவல் நிலையத்தில், ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த வெங்கடேசன் கடந்த 25 நாள்களுக்கு முன்பு பிணையில் வந்தாராம். இவா் மீது கா்நாடக மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களாக வெங்கடேசன், தமது தந்தையிடம் குடிப்பதற்கு பணம் கேட்டும், சொத்தில் பங்கு தர வேண்டும் எனவும் தகராறு செய்து வந்தாராம்.

ADVERTISEMENT

இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை நேரத்தில் மது போதையில் வெங்கடேசன் அவரது தந்தையை அடித்தாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சின்னப்பையன் அவரது மகன் வெங்கடேசனின் தலைப் பகுதியில் உருட்டுக் கட்டையால் தாக்கினாராம். இதில், பலத்த காயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். இது குறித்து பொம்மிடி போலீஸாா் வழக்குப் பதிந்து, விவசாயி சின்னப்பையனை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT