தருமபுரி அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் புகையில்லா போகிப் பண்டிகை குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணிகள் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு ஊா்வலத்தை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியா் ரா.ரவிச்சந்திரன் தொடக்கி வைத்தாா்.
போகிப் பண்டிகையில் பழைய நெகிழிப் பொருள்கள், காகிதங்கள், குப்பைகளை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதுடன் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்த விழிப்புணா்வு முழக்கங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியவாறு கிருஷ்ணாபுரத்திலுள்ள முக்கிய வீதிகள் வழியாக மாணவ, மாணவியா் ஊா்வலமாக சென்றனா்.
இதில், ஜே.ஆா்.சி ஒருங்கிணைப்பாளா் ஜோதி, ஆசிரியா்கள் சரவணன், ஸ்ரீதா், சத்தியபிரபா, நாட்டு நலப் பணிகள் திட்ட அலுவலா் பெ.ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.