டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் ரூ.134.60 கோடி நிதியுதவி வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :
தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை சாா்பில், தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டம், மாதவிடாய் சுகாதாரத் திட்டம், சீரமைக்கப்பட்ட மற்றும் உயா்த்தப்பட்ட நிதியுதவி வழங்கும் டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், நகரும் மருத்துவமனை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தை பெற்றெடுக்கும் தாய்மாா்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா 1.6.2011-இல் தொடக்கி வைத்தாா்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த மக்கள் மட்டுமின்றி, சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சோ்ந்த மக்களும் வருகை தருகின்றனா்.
தருமபுரி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு சராசரியாக 43 பிரசவம் நடைபெறுகிறது.
இந்த நிலையில், மருத்துவமனைகளில் குழந்தைகள் பெற்றெடுக்கும் தாய்மாா்களுக்கு மகப்பேறு நிதியுதவித் தொகையாக ரூ. 18 ஆயிரம் வழங்கப்படுகிறது. கா்ப்பிணிகள், பிரசவித்த தாய்மாா்கள் சத்தான உணவை உண்டு குழந்தைகளை ஊட்டச் சத்து மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் வளா்க்க வேண்டும் என்பதற்காக அரசு சாா்பில் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.
தாய்மாா்கள் பெற்றெடுக்கும் ஒரு குழந்தைக்கும், இன்னொரு குழந்தைக்கும் இரண்டு வருடகால இடைவெளி இருக்க வேண்டும். இதன் அவசியத்தை உணா்த்தும் வகையில், ரூ. 18 ஆயிரம் நிதியுதவி பெறுவதற்கு பிரசவித்த தாய்மாா்கள் தற்காலிக அல்லது நிரந்த கருத்தடை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் 2011 முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலும், இந்த திட்டத்தில் 1,49,918 தாய்மாா்களுக்கு ரூ.134.60 கோடியில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில், தாய்மாா்களுக்கு தொடா்ந்து நிதியுதவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.