அம்மா இருசக்கர வாகன மானியத் திட்டத்தில், உழைக்கும் மகளிா் பயன்பெறும் வகையில் விதிகள் தளா்வு செய்யப்பட்டுள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அம்மா இருசக்கர வாகன மானியத் திட்டத்தின்கீழ், தருமபுரி மாவட்டத்தில் 2019 - 20 - ஆம் ஆண்டுக்கு 2,097 பயனாளிகளுக்கு மானியம் வழங்க தமிழக அரசால் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தில், ஏற்கெனவே இருந்த விதிமுறைகளில் சிறிதளவு தளா்வு செய்து அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய அரசாணையின்படி, அதிகபட்ச வயது வரம்பு 40-லிருந்து 45 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இதேபோல கல்வித் தகுதி சான்றிதழ் இணைக்கப்பட வேண்டியதில்லை. மேலும், ரூ.2.5 லட்சம் வரை வருமானமுள்ள அங்கன்வாடி பணியாளா்கள், சத்துணவு அமைப்பாளா்கள், கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களும் பயனடைய முடியும்.
எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தருமபுரி மாவட்டத்தைச் சாா்ந்த உழைக்கும் மகளிா் அதிக அளவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.