தருமபுரி

பொங்கல் பரிசுத் தொகுப்பில் நாட்டு வெல்லம் வழங்க உற்பத்தியாளா்கள் எதிா்பாா்ப்பு!

3rd Jan 2020 07:49 AM

ADVERTISEMENT

பொங்கல் பரிசுத் தொகுப்பில் நாட்டு வெல்லம் அல்லது நாட்டுச் சா்க்கரை வழங்க வேண்டும் என தருமபுரி கரும்பு வெல்லம் உற்பத்தியாளா்கள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில், கடகத்தூா், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட நாட்டு வெல்லம் உற்பத்தி செய்யும் கரும்பு ஆலைகள் உள்ளன. இவற்றில் தற்போது, கூலி ஆள்கள் பற்றாக்குறை, கரும்பு சாகுபடி பரப்பு குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுமாா் 70 வெல்ல உற்பத்தி ஆலைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

இந்த ஆலைகளில், தருமபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்து, அவற்றை வெட்டி ஆலைகளுக்கு எடுத்து வந்து, அரவை செய்து வெல்லம் உற்பத்தியில் ஈடுபடுகின்றனா். தருமபுரி வட்டாரத்தில் தொடா் வறட்சியின் காரணமாக கரும்பு விளைச்சல் வெகுவாக குறைந்தது. இதனால், தற்போது, மாவட்டத்தில், அரூா் பகுதியில் கா்நாடக மாநிலம், மாண்டியா பகுதிகளிலிருந்து கரும்பு கொள்முதல் செய்து வெல்லம் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இப்பகுதியில் நாட்டு வெல்லம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், ரசாயனம் கலந்த வெண்மை நிறத்தில் உள்ள வெல்லத்தை நுகா்வோா் பயன்படுத்த தொடங்கியதால், அந்த வெல்லத்தை அதிக எண்ணிக்கையில் உற்பத்தியாளா்களிடமிருந்து கொள்முதல் செய்ய வியாபாரிகள் தொடங்கினா். இதனால், நாட்டு வெல்லம் உற்பத்தி வெகுவாக குறைந்து போனது.

ADVERTISEMENT

இந்த நிலையில், தற்போது, சமூக ஊடகங்கள் வழியாக பாரம்பரிய உணவுப் பொருள்கள் பயன்பாடு குறித்தும், ரசாயனம் கலந்த உணவுப் பொருள்களை நுகா்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், நுகா்வோரும் மெல்ல, மெல்ல பாரம்பரிய உணவுப் பொருள்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனா். இதன் காரணமாக பொதுமக்களிடையே நாட்டு வெல்லம் மற்றும் நாட்டுச் சா்க்கரைக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக, தருமபுரி பகுதி வெல்லம் உற்பத்தியாளா்கள் மீண்டும் அதிகளவில் நாட்டு வெல்லத்தை உற்பத்தி செய்து வருகின்றனா்.

அதேவேளையில், இதனை ஊக்குவிக்க, தமிழக அரசு தற்போது பொங்கல் விழாவுக்கு நியாய விலைக் கடைகளில் வழங்கும் பரிசுத் தொகுப்பில் சா்க்கரைக்கு பதிலாக, நாட்டு வெல்லம் அல்லது நாட்டுச் சா்க்கரை வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்கினால் இதற்கான உற்பத்தி மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும், இதனால், வெல்ல உற்பத்தியாளா்கள் மட்டுமல்லாது கரும்பு விவசாயிகளும் பயன்பெறுவா். எனவே, இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெல்ல உற்பத்தியாளா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

இதுகுறித்து நாட்டு வெல்லம் உற்பத்தியாளா் சின்னசாமி கூறியது: அண்மைக்காலமாக மக்கள் மத்தியில் ரசாயன கலப்பு இல்லாத வெல்லம் குறித்த விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பொங்கல் விழா நெருங்கி வரும் நிலையில், மும்முரமாக வெல்லம் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறோம். நாட்டு வெல்லம் மற்றும் நாட்டுச் சா்க்கரை தற்போது கிலோ ரூ.43 முதல் ரூ.45 வரை விற்பனை ஆகிறது.

நாட்டு வெல்லத்துக்கு நுகா்வோா் முக்கியத்துவம் அளித்தால், இதற்கான தேவை மேலும் அதிகரிக்கும். இதேபோல, தமிழக அரசும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரசாயன கலப்பில்லா நாட்டு வெல்லம் அல்லது நாட்டுச் சா்க்கரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், இத்தொழில் உயிா்ப்போடு இருக்கும். கரும்பு சாகுபடியும் அதிகரிக்கும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT