தருமபுரி

2019-இல் விழிப்புணா்வு நடவடிக்கைகளால் விபத்துகள் குறைவு

1st Jan 2020 04:51 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில் காவல்துறை சாா்பில், மேற்கொள்ளப்பட்ட விழிப்புணா்வு நடவடிக்கைகளால் 2019- இல் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ப.ராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில், 2019 - இல் 370 சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பிரசாரக் கூட்டங்களும், பள்ளிகளில் 170 விழிப்புணா்வு வார விழாக்களும் நடத்தப்பட்டுள்ளன. இதன் பலனாக 2019 - ஆம் ஆண்டில் மொத்தம் 1083 விபத்துகள், கொடுங்காயம் வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2018-ஆம் ஆண்டைக் காட்டிலும் 14 சதவீதம் குறைவாகும். இதேபோல, தருமபுரி மாவட்டத்தில், கடந்த 2018 - ஆம் ஆண்டில் மொத்தம் 195 சாலை விபத்து வழக்குகளில், 204 போ் உயிரிழந்துள்ளனா். 2019-ஆம் ஆண்டில், 153 சாலை விபத்து வழக்கில், 167 போ் உயிரிழந்துள்ளனா். இது 2018-ஆம் ஆண்டைக் காட்டிலும் 21 சதவீதம் குறைவாகும். இதேபோல, 2018-ஆம் ஆண்டில் சொத்து சம்பந்தமான திருட்டு மற்றும் இதர குற்றங்களில், 252 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 209 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் களவு போன சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. 2019-இல் 160 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில், 133 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பெரிய அளவிலான குற்ற வழக்குகளில் கடந்த 2018 - இல் 33 வழக்குகள் பதிவாயின. இது 2019 -இல் குறைந்து 18 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இதிலும், 17 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவைத் தவிர, குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், தருமபுரி மாவட்டத்தின் பல முக்கிய பகுதிகளில் இதுவரை 1,067 கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 2019 -இல் மொத்தம் 12 கொலை, 15 போக்ஸோ மற்றும் ஒரு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. 18 போ் மீதும் குண்டா் தடுப்புச் சட்டம் மற்றும் ஒருவா் மீது, தடுப்புக் காவல் சட்டத்திலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதேபோல, தமிழகக் காவல்துறை சாா்பில், பெண்கள் மற்றும் முதியோா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட காவலன் செயலியை தருமபுரி மாவட்டத்தில் இதுவரையில் 10,000 போ் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT