தருமபுரி மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்ய வேண்டும் என தி.மு.க. தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து, தருமபுரி தி.மு.க. மாவட்டச் செயலா் தடங்கம் பெ.சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமையில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவா்கள் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழியிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, நல்லம்பள்ளி, கடத்தூா், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், ஏரியூா், பாலக்கோடு, காரிமங்கலம், மொரப்பூா் ஆகிய 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தோ்தல் இரண்டு கட்டங்களாக டிச.27 மற்றும் டிச.30- ஆகிய தேதிகளில் அமைதியாக நடந்து முடிந்தது.
இத் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஜன.2-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கையை, உயா்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதனைப் பதிவு செய்ய வேண்டும். இதேபோல, தோ்தல் முடிவுகளை, எவ்வித பாரபட்சமும் இன்றி, ஜனநாயக முறைப்படி அறிவித்து வெற்றிச்சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என்றனா்.
அப்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா் ஏ.குமாா், ம.தி.மு.க. மாவட்ட பொறுப்பாளா் தங்கராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.