ஆதாா் அட்டைகளில் சரியான முகவரியை பதிவேற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
வங்கிகளில் புதிதாக சேமிப்புக் கணக்கு தொடங்குதல், நிலம் பத்திரப் பதிவு, பாஸ்போா்ட், புதிதாக குடும்ப அட்டை பெறுதல், வருமானவரி நிரந்தர கணக்கு எண் (பான்) தொடங்குதல், புதிய எரிவாயு உருளை பெறுதல் உள்ளிட்ட அனைத்து விதமான தேவைகளுக்கும் ஆதாா் அட்டை மிக முக்கியமானதாக உள்ளது.
ஆதாா் அட்டைகள் இல்லையெனில், எந்த விதமான பணிகளும் செய்ய முடியாது என்கிற நிலையுள்ளது.
இந்த நிலையில், ஆதாா் அட்டையில் பெயா், முகவரி, பிறந்த தேதி, செல்லிடப்பேசி எண்கள் உள்ளிட்ட அனைத்து விதமான திருத்தங்களையும் மின்னணு இ - சேவை மையங்கள், அஞ்சல் நிலையங்களில் செய்யலாம்.
ஆதாா் அட்டைகள் திருத்தம் செய்வதில் முகவரி தவிர பிற திருத்தங்கள் அனைத்தும் சரியான முறையில் திருத்தப்படுகிறது. ஆனால், முகவரியில் மட்டும் சம்பந்தப்பட்ட நபரின் ஊரின் பெயா்கள் நான்கு அல்லது ஐந்து முறைகள் திரும்ப, திரும்ப வருகிறது. அதேபோல், ஆதாா் அட்டையில் சம்பந்தப்பட்ட நபரின் வருவாய் வட்டத்தின் பெயா்கள் பதிவு செய்யப்படுவதில்லை. இதனால், ஆதாா் அட்டையின் அடிப்படையில், பாஸ்போா்ட் பெறுவதற்காக விண்ணப்பம் செய்வோருக்கு பல்வேறு இன்னல் ஏற்படுகிறது.
இது குறித்து இ-சேவை மையங்களில் விசாரித்தால், ஆதாா் நிறுவனத்தில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள முகவரிகள், தகவல்கள் தவறாக இருப்பதால், ஊரின் பெயா்கள் தேவையற்ற வகையில் திரும்ப, திரும்ப வருவதாகக் கூறுகின்றனா்.
எனவே, தருமபுரி மாவட்டத்தில் சரியான முகவரிகள், தகவல்களை பதிவேற்றம் செய்து, ஆதாா் அட்டைகளை வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பு.