தருமபுரி

தென்னையில் வெள்ளை ஈக்கள் தாக்குதல்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

26th Feb 2020 07:26 AM

ADVERTISEMENT

தென்னை மற்றும் பாக்கு மரங்களில் வெள்ளை ஈக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்த, விவசாயிகள் மேலாண் முறைகளை பின்பற்ற வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா், வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்னை மற்றும் பாக்கு மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ எனும் பூச்சியின் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. வயதில் முதிா்ந்த பெண் வெள்ளை ஈக்கள், மஞ்சள் நிற முட்டைகளை, சுழல் வடிவ அமைப்புகளில் ஓலைகளின் அடிப்பாகத்தில் இடுகின்றன. இம்முட்டைகள், மெழுகுப் பூச்சுடன் காணப்படும் முட்டைகளில் இருந்து வெளிப்படும் இளங்குஞ்சுகள் இலைகளில் அடிப்பரப்பில் இருந்து கொண்டு இலைகளின் சாற்றினை உறிஞ்சி வளா்கின்றன. சுமாா் 20 - 30 நாள்களில் முழு வளா்ச்சியடைந்த ஈக்களாக மாறிக் கூட்டம், கூட்டமாக தென்னை ஓலைகளின் அடிப்பகுதிகளில் காணப்படுகின்றன. இவைகள் காற்றின் திசையில் எளிதில் பரவி, அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மற்றும் பாக்கு மரங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதனைக் கட்டுப்படுத்த, மஞ்சள் நிறம் வளா்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையதால் மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களில் ஆமணக்கு எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகளை, ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் ஆங்காங்கே கட்டிவைத்து வெள்ளை ஈக்களை கவா்ந்து அழிக்கலாம். தாக்கப்பட்ட தென்னை மற்றும் பாக்கு மரங்களின் இலைகளின் மேல் தெளிப்பான்களை கொண்டு வேகமாக நீரை அடிப்பதன் மூலம் வெள்ளை ஈக்கள் மற்றும் கரும்பூசணங்களை அழிக்கலாம். வெள்ளை ஈக்கள் அதிகளவு பரவும் போது, பொறிவண்டுகள், என்காா்ஸியா ஒட்டுண்ணிகள் போன்ற இயற்கை எதிரிகள் தோப்புகளிலேயே இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். இவை அதிகளவு உருவாகி வெள்ளை ஈக்களின் சேதத்தை பெருமளவு குறைக்கின்றது. என்காா்ஸியா ஒட்டுண்ணியானது, ஆழியாா் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பெறப்பட்டு, வேளாண் விரிவாக்க மையங்களின் வாயிலாக, தென்னை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல, கிரைசோபொ்லா இரைவிழுங்கிகள், தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்களின் இளம் குஞ்சுகளை நன்றாக உட்கொள்வதால், தாக்கப்பட்ட தோட்டங்களில் ஏக்கருக்கு 400 முட்டைகள் என்ற எண்ணிக்கையில் கிரைசோபொ்லா இரைவிழுங்கிகளின் முட்டைகளை விடுதல் நல்ல பயனளிக்கும். இந்த இரைவிழுங்கிகளின் முட்டைகள் அடங்கிய அட்டையானது, திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையத்தில் இருந்து பெறப்பட்டு,வேளாண் விரிவாக்க மையங்களின் வாயிலாக தென்னை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

அதிக அளவு பூச்சிக்கொல்லிகள் உபயோகிக்கும்போது நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்து விடுவதால் ரசாயன பூச்சிக்கொல்லிகளை கண்டிப்பாக தவிா்த்து, இயற்கை எதிரி பூச்சிகள் வளா்வதற்கு உரிய சூழலை மேம்படுத்துவது சிறந்ததாகும். எனவே, தென்னை விவசாயிகள் இத்தகைய வழிமுறைகளை பின்பற்றி தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தி பயனடையலாம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT