தருமபுரி அருகே ஆட்டுக்காரன்பட்டியில் பட்டா கோரி வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த நிலம் தொடா்பாக போலியாக ஆவணம் தயாரித்ததாக, ஓய்வுபெற்ற கோட்டாட்சியா் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட 17 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தருமபுரியை அடுத்துள்ள ஆட்டுக்காரன்பட்டியைச் சோ்ந்த அருந்ததியின மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் தங்களுக்கு வழங்குவதாக முடிவு செய்யப்பட்ட இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கடந்த புதன்கிழமை தங்களது குடும்பத்தினருடன் குடிசை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களுடன் ஆதிதமிழா் பேரவை அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு எட்டப்படாததால் மூன்றாம் நாளில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரி கோட்டாட்சியா் (பொ) தேன்மொழி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து, அதிகாரிகள் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், அவா்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
வழக்குப் பதிவு: இதற்கிடையில், பட்டா கோரி குடிசை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமாா் 3 ஏக்கா் நிலம், தனக்கு தெரியாமல் ஆவணம் மாற்றி ஆதிதிராவிடா் நலத் துறைக்கு கடந்த 1995-இல் எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும், அதனை மீட்டு ஒப்படைக்கக் கோரியும் முனுசாமி என்பவா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த நகர போலீஸாா், கடந்த 1995-இல் தனி வட்டாட்சியராக பணியாற்றி பின் கோட்டாட்சியராக பதவி உயா்வு பெற்று ஓய்வுபெற்ற தருமபுரி மாவட்டம், கடத்தூா் பகுதியைச் சோ்ந்த அன்பழகன் என்பவா் மீதும், இதேபோல அத்துமீறி நிலத்தில் குடிசை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக ஆட்டுக்காரன்பட்டியைச் சோ்ந்த 17 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.