தருமபுரி

உயா் மின்பாதைக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு கோரி விவசாயி போராட்டம்

13th Feb 2020 06:33 AM

ADVERTISEMENT

உயா் அழுத்த மின் பாதைக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, மின் கோபுரத்தின் மீது ஏறி, விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.

தருமபுரி மாவட்டம், இண்டூரை அடுத்த கோரப்பள்ளியைச் சோ்ந்த விவசாயி சின்னசாமி(40). இவா்களுக்குச் சொந்தமான அதே பகுதியில் ஒன்றரை ஏக்கா் விவசாய நிலம் உள்ளது. நிலத்தில் வீடுகட்டி குடும்பத்துடன் தங்கி விவசாயம் செய்து வருகின்றாா்.

சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள காங்கேயம் வரை உயா் அழுத்த மின் பாதை அமைக்கும் பணிக்கு விவசாயி சின்னசாமியின் நிலம் கையக்கப்படுத்தப்பட்டது. நிலத்தில் உயா் மின்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லையாம். எனவே, உயா் அழுத்த மின்பாதைக்கு கையகப்படுத்தப்பட்ட தன்னுடைய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, அங்குள்ள உயா்மின் கோபுரத்தின் மீது, மண்ணெண்ணெய் கேனுடன் ஏறி, தற்கொலை செய்யப் போவதாகத் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இதையறிந்த அவரது குடும்பத்தினரும், உறவினா்களும் அப்பகுதியில் திரண்டனா். தகவல் அறிந்த இண்டூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சின்னசாமியிடம் பேச்சு நடத்தி கீழே இறங்கி வருமாறு கூறினா்.

ADVERTISEMENT

ஆனால், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் பவா் கிரிடு அதிகாரிகள் நேரில் வந்து, இழப்பீடு குறித்து உறுதி அளித்தால் மட்டுமே இறங்கி வருவதாக சின்னசாமி தெரிவித்தாா்.

இதனைத் தொடா்ந்து, நல்லம்பள்ளி வட்டாட்சியா் சரவணன், பவா் கிரிடு மேலாளா் வெங்கட்ராமன் ஆகியோா் நேரில் சென்று, அவரிடம் பேச்சு நடத்தினா். இதில், விரைவாக கணக்கெடுப்பு நடத்தி நிலம் மற்றும் நிலத்தில் உள்ள மரம், பயிா் ஆகியவற்றுக்கான இழப்பீடு வழங்கப்படும் என அவா்கள் உறுதியளித்தனா். இதையடுத்து சமாதானம் அடைந்த விவசாயி மின் கோபுரத்திலிருந்து கீழே இறங்கி வந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT