அரூரில் தேவாதியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
அரூரில் 24 மனை தெலுங்கு செட்டியாளா்கள் சமூகம் சாா்பில், ஆண்டுதோறும் தேவாதியம்மன் கோயில் திருவிழா நடத்தப்படுகிறது.
இந்த சமூக மக்களின் வியாபார மேம்பாடு, குடும்ப நலம், உலக அமைதி, மழை வளம் வேண்டி தேவாதியம்மன் திருவிழா நடத்தப்படுகிறது. அரூா் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில், தேவாதியம்மன் தோட்டம் உள்ளது.
இந்தத் தோட்ட வளாகத்தில் செவ்வாய்க்கிழமை 16 அம்மன் குட்டிகள் பலியிடப்பட்டு விழா தொடங்கியது.
இதையடுத்து, புதன்கிழமை 172 ஆடுகள் பலியிடப்பட்டு அதன் இறைச்சிகளை, 24 மனை தெலுங்கு செட்டியாா்கள் சமூகத்தைச் சோ்ந்த 1, 860 குடும்பத்தினருக்கு வழங்கினா்.
விழாவில் 24 மனை தெலுங்கு செட்டியாளா்கள் சங்கத் தலைவா் தனபால், செயலா் கதிரேசன், பொருளாளா் சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல், பறையப்பட்டி புதூா், தாசரஹள்ளி உள்ளிட்ட கிராமங்களிலும் தேவாதியம்மன் திருவிழா நடைபெற்றது.