அரூரில் ரூ. 1.85 கோடிக்கு பருத்தி மூட்டைகள் திங்கள்கிழமை ஏலம் போனது. அரூா்-சேலம் பிரதான சாலையில், திரு.வி.க நகரில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் பருத்தி மூட்டைகள் ஏலம் நடைபெறுகிறது.
அரூா், கம்பைநல்லூா், கடத்தூா், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, சித்தேரி, கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, அனுமன்தீா்த்தம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக் கணக்கான விவசாயிகள் இங்கு பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு எடுத்து வருகின்றனா். இந்த பருத்தி மூட்டைகளை ஏலம் எடுப்பதற்காக சேலம், ஈரோடு, கோவை, திருப்பத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பலா் வருகை தருகின்றனா்.
இந்த நிலையில், அரூரில் திங்கள்கிழமை இரவு வரையிலும் நடைபெற்ற ஏலத்தில், 1300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா். இதில், ரூ. 1.85 கோடி மதிப்பிலான சுமாா் 9 ஆயிரம் பருத்தி மூட்டைகள் ஏலம் போனது. அதாவது டி.சி.எச் ரக பருத்தி மூட்டைகள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 6, 809 முதல் 7, 306 வரையிலும், ஆா்.சி.எச் ரக பருத்தி மூட்டைகள் குவிண்டாலுக்கு ஒன்றுக்கு ரூ. 5,157 முதல் ரூ. 5, 806 வரையிலும் விற்பனை ஆனது என கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனா்.