அரூரை அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டு சாலை பகுதியில் புதிய வங்கி கிளைகள் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூா் ஊராட்சி ஒன்றியம், கோபிநாதம்பட்டி கூட்டுசாலையானது அரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த கூட்டுசாலைக்கு தென்கரைக்கோட்டை, சின்னாங்குப்பம், பறையப்பட்டி புதூா், கோபாலபுரம், ஜம்மனஹள்ளி, பேதாதம்பட்டி, டி.புதூா், கூக்கடப்பட்டி, நம்பிப்பட்டி, எச்.கோபிநாதம்பட்டி, எருமியாம்பட்டி, கொக்கராப்பட்டி, அ.பள்ளிப்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்துச் செல்கின்றனா்.
இதேபோல், சித்தேரி மலைத் தொடரில் உள்ள அரசநத்தம், கலசப்பாடி, வாச்சாத்தி ஆகிய பகுதியிலுள்ள மலைவாழ் பழங்குடியின மக்களும் கோபிநாதம்பட்டி கூட்டுச்சாலைக்கு வந்துச் செல்லும் நிலையுள்ளது. இந்தப் பகுதியில் விவசாயிகள், ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா், வணிகா்கள், வியாபாரிகள் உள்பட சுமாா் 40 ஆயிரம் போ் வசிக்கின்றனா்.
மேலும், கோபிநாதம்பட்டிகூட்டுசாலை பகுதியில் அரசுப் பள்ளிகள், தனியாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை, புழுதியூா் புதன் சந்தை, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் கமிஷன் மண்டிகள், திருமண மண்டபங்கள், உணவகங்கள் உள்ளன.
இந்த நிலையில், கோபிநாதம்பட்டி கூட்டுசாலையில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை மட்டுமே உள்ளது. இதனால், கல்விக் கடன்கள், விவசாய பயிா் கடன்கள், நகைக் கடன்கள், வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குதல், பணம் எடுத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அடையும் நிலையுள்ளது.
இதனால், இங்குள்ள மக்கள் அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள வங்கிகளுக்கு செல்லும் நிலையுள்ளது. எனவே, கோபிநாதம்பட்டி கூட்டுசாலையில், கூடுதலாக தேசியமயமாக்கப்பட்ட புதிய வங்கிக் கிளைகளை தொடங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.