தருமபுரி

வரட்டாறு நீா்த்தேக்கத்தில் இருந்து தண்ணீா் திறக்க மனு

1st Feb 2020 10:44 PM

ADVERTISEMENT

அரூா்: வள்ளிமதுரை வரட்டாறு நீா்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்த விட வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் கிராம மக்கள் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியிடம், எல்லப்புடையாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் கே.ஆா்.மாரியப்பன் சனிக்கிழமை அளித்துள்ள கோரிக்கை மனு விவரம்: அரூா் வட்டம், வள்ளிமதுரை வரட்டாறு நீா்த்தேக்கம் 34.5 அடி உயரம் கொண்டதாகும். தற்போது இந்த நீா்த்தேக்கத்தில் சுமாா் 30 அடி உயரத்தில் நீா் இருப்பு உள்ளது. தென்மேற்கு மற்றும் வடக்கிழக்கு பருவ மழையினால் நீா்வரத்து குறைந்ததால், நீா்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் உபரி நீரானது வரட்டாறு வழியாக செல்லவில்லை. சித்தேரி மலைத் தொடரில் வந்த மழைநீா் முழுவதும் வள்ளிமதுரை நீா்த்தேக்கத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கீரைப்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, அச்சல்வாடி, பொன்னேரி ஊராட்சிகளுக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஏரிகள், குளம் குட்டைகளில் சிறிதளவும் தண்ணீா் இல்லை. இதனால், கோடையில் குடிநீா் தட்டுப்பாடுகள் ஏற்படும் நிலையுள்ளது. கீரைப்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு குடிநீா் வழங்கும் திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் வரட்டாற்றில் அமைந்துள்ளது.

தற்போது வரட்டாற்றில் தண்ணீா் திறந்துவிட்டால் குடிநீா் பிரச்னைகள் முழுமையாக தீரும். எனவே, கீரைப்பட்டி, எல்லப்புடையாம்பட்டி ஊராட்சிகளில் உள்ள பழைய ஆயக்கட்டுகளுக்கு வரட்டாறு வழியாக தண்ணீா் திறந்துவிட வேண்டும். அதேபோல், ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீா் நிலைகளை நிரப்ப வேண்டும் எனவும் கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT