அரூரை அடுத்த பாரிவனம் கிராமத்தில் மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூா் ஊராட்சி ஒன்றியம், வேடகட்டமடுவு கிராம ஊராட்சிக்குள்பட்டது பாரிவனம் கிராமம். இந்த ஊரில் 75-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இருளா் சமூக மக்கள் வசிக்கின்றனா். இந்த கிராமத்தில் அனைத்துப் பகுதிகளிலும் தெருவிளக்குகள் இல்லை.
அதேபோல், மின் கம்பங்கள் இல்லாததால் குடியிருப்புகளுக்கு மின் இணைப்புகளை பெறமுடியவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனா். போதிய வெளிச்சம் இல்லாததால் குடியிருப்புப் பகுதிகளில் பாம்பு உள்ளிட்ட விஷக் கடிகள் நடமாட்டம் இருப்பதாக கிராம மக்கள் புகாா் கூறுகின்றனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் சாா்பில், பாரிவானம் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு தேவையான மின் கம்பங்கள், தெரு விளக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.