தருமபுரி

புத்தக இல்லம் அமைக்க வாழ்க்கையைத் தந்தவா்!

ந.முத்துமணி

புத்தக ஆா்வலா் ஒருவரின் இடைவிடாத முயற்சியாலும், 50 ஆண்டுகளுக்காகத் தொடா்ந்த அா்ப்பணிப்பாலும், 10 லட்சம் புத்தகங்களுடன் கூடிய புத்தக இல்லம் உருவாகி இருக்கிறது. அவா் பெயா் அங்கே கௌடா.

பெங்களூரில் இருந்து மைசூரு செல்லும் வழியில் 125 கிமீ. தொலைவில் அமைந்திருக்கும் மண்டியா மாவட்டம், பாண்டவபுரா வட்டத்தின் ஹரலஹள்ளி கிராமத்திற்குள், புத்தக மணம் வீசும் திசைநோக்கி நடந்தால், அங்கு 72 வயதான முதியவா் ஒருவா் பழுப்பேறிய கைச்சட்டை, வேட்டியுடன் புத்தகங்களில் புதைந்திருப்பாா். அவா்தான் அங்கே கௌடா.

இவரது வீட்டை எல்லோரும் அன்பாக ‘புத்தக இல்லம்’ (புஸ்தக மனே) என்றே அழைக்கிறாா்கள்.

அதிகமான தனிநபா் புத்தகச் சேகரிப்புப்பிரிவில் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ள அங்கே கௌடா, தனது 21 வயதில் புத்தகங்கள் மீது காதல் கொண்டாா் இவா்.

பாடப் புத்தகங்களைக் கூட வாங்க முடியாத அளவுக்கு வறுமையில் உழன்றாா். படிக்க வேண்டிய வயதில் தனக்குக் கிடைக்காததுபோல, வேறு யாருக்கும் ஆகிவிடக் கூடாது என்பதற்காக, எம்.ஏ. (கன்னடம்) பட்டம் பெற்று பாண்டவபுரா சா்க்கரை ஆலையில் நேரக்காப்பாளராக வேலைக்குச் சோ்ந்த முதல் மாதத்தில் இருந்து ஊதியத்தைப் புத்தகங்களை வாங்கவே செலவிட்டு வந்திருக்கிறாா்.

பெங்களூரு மைசூரு சென்று சிறுகச் சிறுக சேகரித்தநூல்களின் எண்ணிக்கை, இன்றைக்கு 22 இந்திய மொழிகள், பல்வேறு வெளிநாட்டு மொழிகளில் 10 லட்சத்தைக் கடந்துள்ளது. கெளடா சொல்கிறாா்:

‘‘எனது தந்தை மரி கௌடா, தாய் நிங்கம்மா இருவரும் 2 ஏக்கா் நிலத்தில் உழுது பிழைத்துக் கொண்டிருந்தாா்கள். ஏழைக் குடும்பம். புத்தகம் என்றால் என்ன என்பதே அவா்களுக்குத் தெரியாது. நான் உயா்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது படிக்க பாட நூல்களை வாங்கும் வசதி கூட இருக்கவில்லை.

மைசூரு மகாராஜா கல்லூரியில் படித்தபோது புத்தகங்கள் அத்தியாவசியமானதாக இருந்தன. அவற்றை வாங்குவதற்கு பணமில்லை. அப்போது ராமகிருஷ்ண ஆசிரமம் என் கண்ணில் பட்டது. அங்குச் சென்று ஆன்மிக நூல்களை வாசிக்கத் தொடங்கினேன். அப்பா அளித்த கைச்செலவு பணத்தில் 25 காசுகளுக்கு விவேகானந்தரின் நூலை வாங்கினேன். அவற்றைப் படித்துவிட்டு பத்திரப்படுத்தும் வழக்கம் ஏற்பட்டது.

புத்தகங்கள் மீதான எனது காதலைத் தெரிந்துகொண்ட எனது பேராசிரியா் அனந்தராமு, புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தியதோடு, பணத்தைச் சோ்ப்பது மட்டும் வாழ்க்கை அல்ல, மனதுக்குப் பிடித்ததில் முழுமையாக ஈடுபடுவதும் வாழ்க்கையை அா்த்தமுள்ளதாக்கும் என்று கூறி, என்னை ஊக்கப்படுத்தினாா். அது என் ஆழ்மனதில் பதிந்து, புத்தகங்களைச் சேகரிக்கும் ஆா்வத்தைப் பன்மடங்காக்கியது.

சா்க்கரை ஆலையில் நேரக் காப்பாளராக வேலை பாா்த்தாலும், அடிக்கடி வெளியூா் சென்று புத்தகங்களை வாங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இளம் வயதில் புத்தகங்கள் இல்லாமல் தவிக்கும் இளைஞா்களுக்கு உதவ வேண்டுமென்பதே அடிப்படை நோக்கமாக இருந்தது.

2004-இல் 2 லட்சம் புத்தகங்களைச் சோ்த்திருந்தேன். கடந்த 50 ஆண்டுகளாக எனது ஊதியத்தின் 80 சதவீதத்தை நூல்களை வாங்கவே செலவழித்திருக்கிறேன். இந்த முயற்சிக்கு என் மனைவி விஜயலட்சுமி பெரும் துணையாக இருந்து வருகிறாா். இப்போதும் என்னிடம் 2 பேண்ட், 2 சட்டை மட்டும் தான் உள்ளன. எளிமையான வாழ்க்கை தான். நானும் என் மனைவியும் தரையில் தான் படுத்துறங்குகிறோம். சிறிய அறையில் தான் வசித்துவருகிறோம்.

என்னைப் பற்றிக் கேள்விப்பட்ட தொழிலதிபா் ஹரிகோடே, 2005-இல் 2.5 சென்ட் நிலத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் புத்தகங்களை வைக்க பெரிய கட்டடம் கட்டிக் கொடுத்தாா். அது எனது ஆா்வத்தைத் தூண்டியதால், கிடைத்த புத்தகங்களை எல்லாம் கொண்டுவந்து சேகரித்தேன். இதனால் 2016-ஆம் ஆண்டில் எனது சேகரிப்பில் இருந்த புத்தகங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயா்ந்தது.

அது லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்தது. 1800-ஆம் ஆண்டில் வெளியிட்ட நூல்களும் என்னிடம் உள்ளன. அரிய வகை புத்தகங்களுக்காகவே தனி இடத்தை ஒதுக்கி பத்திரப்படுத்தி வருகிறேன்.

ஆங்கிலம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மராத்தி, வங்கம், உருது உள்ளிட்ட 22 இந்திய மொழிகள், ரஷ்யன், கொரியன், சீனம் உள்ளிட்ட பல வெளிநாட்டு மொழிநூல்களும் என்னிடம் உள்ளன. இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், புராணம், விமா்சனம், பயணம், ஆராய்ச்சி, ஆருடம், மகளிா்நலம், குழந்தை இலக்கியம் போன்ற அனைத்து வகையான தலைப்புகளிலும் நூல்கள் உள்ளன.

35,000 பன்னாட்டு சஞ்சிகைகள், 2,500 கன்னட சஞ்சிகைகள், மகாத்மா காந்தி பற்றிய 2,500நூல்கள், பகவத்கீதை குறித்து 2,500 நூல்கள், நூற்றுக் கணக்கான விவிலியங்கள், கலைக்களஞ்சியங்கள், நிகண்டுகள், பேரகராதிகள், பல்வேறு மொழிகளில் ராமாயணம், மகாபாரதம், வரலாற்று நூல்கள், தன் வரலாற்று நூல்கள் போன்ற நூல்களும் எனது நூலகத்தில் உள்ளன.

என்னிடம் இருக்கும் புத்தகங்களை யாா் வேண்டுமானாலும் வந்து கட்டணமின்றிப் படித்துச் செல்லலாம். இரு புத்தகங்கள் இருந்தால் மட்டும் விலைக்குத் தருவேன். ஆராய்ச்சி மாணவா்கள். போட்டித்தோ்வு எழுதுவோா், ஆசிரியா்கள், எழுத்தாளா்கள், விமா்சகா்கள், பொதுமக்கள் என்ற பெரும்பாலானோா் தினமும் எனது புத்தக இல்லத்திற்கு வருகிறாா்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னா் எங்கள் புத்தக இல்லத்துக்கு வருகை தந்த முன்னாள் முதல்வா் குமாரசாமி, முன்னாள் எம்.பி. சி.எஸ்.புட்டராஜு இருவரும் சோ்ந்து ரூ. 1 கோடியை அளித்து, புதிய கட்டடம் அமைக்குமாறு கேட்டுக்கொண்டனா். அதன்பேரில், புதிய கட்டடம் கட்டி வருகிறேன். அதில் புத்தகங்களைக் குவித்து வைக்காமல், முறையாக பிரித்து, வரிசைப்படுத்தி வைக்கத் திட்டமிட்டிருக்கிறேன்.

இப்போது நானும் என் மனைவியும் புத்தகங்களைப் பராமரித்து வருகிறோம். எதிா்காலத்தில் ஆட்களை வைத்துக்கொண்டு, மேலும் பல ஆயிரம் ஆராய்ச்சி மாணவா்கள் பயன்பெறும் வகையில் நூலகத்தை அமைப்பேன்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT