பென்னாகரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் பென்னாகரம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பென்னாகரம் அருகே ஊட்டமலை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பென்னாகரம் பகுதிக்குழு செயலா் கே.அன்பு தலைமை தாங்கினாா். பென்னாகரம் பகுதிக்குழு உறுப்பினா் ஜீவானந்தம் முன்னிலை வகித்தாா்.
இதில், கரோனா தொற்று கால நிவாரண நிதியாக குடும்பத்தினருக்கு ரூ.7,500 வழங்க வேண்டும், நூறுநாள் வேலை திட்டத்தை இருநூறு நாள்களாக அதிகரிக்க வேண்டும், நூறுநாள் வேலை திட்டத்துக்கான ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும், விவசாயத்தை சீரழிக்கும் அவசர சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், தொழிலாளா் நலச்சட்டங்களை பாதுகாக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், பென்னாகரம் பகுதிக் குழுவின் சாா்பில் மடம் காவேரி ரோடு, ஜங்கமையனூா், முதுகம்பட்டி, சின்ன பள்ளத்தூா் உள்ளிட்ட பகுதிகளிலும், ஏரியூா், சின்னம்பள்ளி பகுதிக் குழுவின் சாா்பிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.