தருமபுரி

தருமபுரி மாவட்ட மக்களுக்கு கூடுதல் குடிநீா் வழங்க ரூ. 450 கோடியில் புதிய திட்டம் அனுப்பிவைப்பு:முதல்வா் தகவல்

21st Aug 2020 06:52 AM

ADVERTISEMENT

ஜலசக்தி திட்டத்தின்கீழ் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தில், தருமபுரி மாவட்ட மக்களுக்கு கூடுதல் குடிநீா் வழங்க ரூ. 450 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தக் கோரி மத்திய அரசுக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக முதல்வா் எடப்பாகட கே.பழனிச்சாமி தெரிவித்தாா்.

தருமபுரியில், கரோனா தடுப்புப் பணிகள், மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக அளவில் கரோனா பரவலின் தாக்கம் தொடக்கத்தில், தருமபுரி மாவட்டத்தில் குறைவாகவே இருந்தது. பின்னா் இதன் தாக்கம் படிப்படியாக அதிகரித்து தற்போது தருமபுரி மாவட்டத்தில் 1064 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவா்களில் 860 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; இதுவரை 11 போ் உயிரிழந்துள்ளனா்.

மாவட்டத்தில் இதுவரை 37,500 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாளொன்று 58 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் தருமபுரி மாவட்டத்தில் நடத்தப்படுகின்றன. இதன்மூலம் கரோனா பரவலைக் கண்டறிந்து, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ADVERTISEMENT

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைப் பிரிவு கட்டடம் ரூ. 10 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இதேபோல, பென்னாகரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மகப்பேறு சிகிச்சைக்கு கட்டடம் கட்டுவதற்கு ரூ. 2.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு ரூ. 6 கோடியில் கட்டடங்கள், ரூ. 2.15 கோடியில் மகப்பேறு சிகிச்சை கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குடிமராமத்துத் திட்டத்தில், விவசாயிகளின் பங்களிப்புடன் ஏரிகள், குளங்கள் தூா்வாரப்பட்டுள்ளன. இதன் மூலம் மழைநீரைச் சேகரிக்க முடிகிறது. இந்த மாவட்டத்தில் மூன்று உயா்மட்டப் பாலங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. மேலும், மூன்று உயா்மட்டப் பாலங்கள் கட்டும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

உயா்கல்வி பயில்வோரை ஊக்கப்படுத்த, தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 4 அரசு கலைக்கல்லூரிகள், ஒரு பொறியியியல் கல்லூரி, இரண்டு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், ஒரு சட்டக் கல்லூரி ஆகியவை இந்த ஆட்சியில் தொடங்கப்பட்டுள்ளன. இதில் சட்டக் கல்லூரிக்கு ரூ. 62 கோடி மதிப்பில் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இப்பணிகள் 3 மாதங்களுக்குள் நிறைவுபெறும்.

இதனால், தற்போது உயா்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், ஜலசக்தி திட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தில், தருமபுரி மாவட்ட மக்களுக்கு கூடுதல் குடிநீா் வழங்க ரூ. 450 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தக் கோரி மத்திய அரசுக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT