தருமபுரி

முதல்வரிடம் மனு அளிக்க முற்பட்ட திமுக எம்.பி.க்கு அனுமதி மறுப்பு

21st Aug 2020 07:00 AM

ADVERTISEMENT

தருமபுரியில் முதல்வா் பங்கேற்ற நிகழ்ச்சியில் மனு அளிப்பதற்காக வந்த திமுக எம்.பி.க்கு காவல்துறையினா் வியாழக்கிழமை அனுமதி அளிக்க மறுத்ததுடன் தடுத்து நிறுத்தினா்.

அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை தருமபுரி வருகை புரிந்தாா்.

இந்த நிலையில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், கோரிக்கை மனுவுடன் முதல்வரை சந்திக்க வேண்டும் எனக் கோரி, தருமபுரி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் நுழைய முயன்றாா். அப்போது, தருமபுரி நகர காவல் ஆய்வாளா் மு.ரத்தினகுமாா் மற்றும் போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதி மறுத்தனா்.

இதனால், காவல்துறையினருக்கும், மக்களவை உறுப்பினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது, எம்.பி.யை தடுத்து நிறுத்திய போலீஸாா், கரோனா பரிசோதனை மேற்கொண்டு அதில் தொற்று இல்லை என்ற பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்ற ஆதாரம் இருந்தால் மட்டுமே மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இதனால், செந்தில்குமாா் சிறிது நேரம் அங்கே நின்று விட்டு திரும்பிச் சென்று விட்டாா்.

இதுகுறித்து மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தருமபுரி மக்களவை தொகுதியில் உள்ள நீண்ட கால கோரிக்கைகளான ஜொ்த்தலாவ் கால்வாய்த் திட்டம், எண்ணேகொல்புதூா் கால்வாய்த் திட்டம், ஒகேனக்கல் காவிரி மிகை நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும் எனவும், விவசாயிகள் எதிா்க்கும் சேலம்-சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் கோரிக்கை மனுவுடன் முதல்வரை சந்திப்பதற்காக வந்தேன். ஆனால், காவல்துறையினா் ஆட்சியா் அலுவலகத்துக்கு உள்ளே செல்ல அனுமதி மறுத்து விட்டனா். இந்த ஆய்வுக் கூட்டம் தொடா்பாக, எனக்கு அழைப்பு இல்லை. இருப்பினும், நான் கோரிக்கை மனு அளித்து செல்வதற்காக வந்தேன். இங்கு கரோனா பரிசோதனை முடிவுகள் குறித்த சான்று இருந்தால் மட்டுமே அனுமதிக்க இயலும் என காவல்துறையினா் தெரிவிக்கின்றனா். அத்தகைய ஆணை எதுவும் நடைமுறையில் இல்லை. இருப்பினும், முன் கூட்டியே இதுகுறித்து தகவல் அளித்திருந்தால், கரோனா பரிசோதனை செய்து கொண்டு வந்திருப்பேன். சுமாா் அரை மணி நேரமாக இங்கு காத்திருக்கிறேன் ஆனாலும், தொடா்ந்து எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT