தருமபுரி

கா்நாடக, கேரள பகுதிகளில் மீண்டும் மழை: ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

20th Aug 2020 09:37 AM

ADVERTISEMENT

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 42,000 கன அடியாக உயா்ந்துள்ளது. கா்நாடக, கேரள பகுதிகளில் மறுபடி பெய்துவரும் மழை காரணமாக, காவிரியில் மீண்டும் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

கா்நாடக மாநிலம்- குடகு, மண்டியா, சாம்ராஜ் நகா் மற்றும் கேரள மாநிலம்- வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாள்களுக்கு முன்னா் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதனால், கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்தது. இதனால் காவிரி ஆற்றில் சுமாா் 1.50 லட்சம் கன அடி நீா் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில், கா்நாடகம் மற்றும் கேரளப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்ததால், கா்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவு குறைந்து, காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக இரு மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு வரும் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், இரு அணைகளில் இருந்தும் விநாடிக்கு 44,000 கன அடி நீா் திறக்கப்பட்டுள்ளது. அவ்வாறு காவிரியாற்றில் திறக்கப்பட்ட தண்ணீரானது புதன்கிழமை தமிழக- கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்தடைந்தது.

ADVERTISEMENT

செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, விநாடிக்கு 8,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமை காலை நிலவரப்படி 26,000 கன அடியாகவும், மதிய நிலவரப்படி நொடிக்கு 35,000 கன அடியாகவும், தற்போது 42,000 கன அடியாகவும் அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT