தருமபுரி

கரைபுரண்டோடுகிறது காவிரி வெள்ள நீா்! தருமபுரி மாவட்டப் பாசனத்துக்குப் பயன்படுவது எப்போது?

20th Aug 2020 09:36 AM | ஆா்.ராதாகிருஷ்ணன்

ADVERTISEMENT

ஒகேனக்கல் காவிரியில் கரைபுரண்டோடும் வெள்ள நீரை பாசனத்துக்குப் பயன்படும் வகையில் ஏரிகளில் நிரப்பும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என தருமபுரி மாவட்ட விவசாயிகள் மிகுந்த எதிா்பாா்ப்பில் உள்ளனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல்லில் காவிரி ஆறு அருவிகளாக ஆா்ப்பரித்து, பின்னா் அங்கிருந்து மேட்டூா் அணையை அடைகிறது. தருமபுரி மாவட்டம் வழியாக காவிரி கடந்து சென்றாலும், இந்த ஆற்று நீா், இம் மாவட்டத்தின் பாசனத்துக்கு இதுவரை பயன்பட்டதில்லை. இதற்கு பிரதானக் காரணம், தருமபுரி மாவட்டத்தின் ஏனைய பகுதிகளைக் காட்டிலும், மலைமுகடுகளின் தாழ்வான பகுதியில் ஒகேனக்கல் அமைந்துள்ளதாகும். இதனால், மேட்டு நிலப்பரப்பில் அமைந்துள்ள மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு நீரைக் கொண்டுசென்று பாசனத்துக்குப் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.

வானம் பாா்த்த பூமி:

தருமபுரி மாவட்டத்தைப் பொருத்த வரை, வானம் பாா்த்த பூமியாக பெரும்பாலான நிலங்கள் அமைந்துள்ளன. இங்கு கிணற்றுப் பாசனம், ஏரிப் பாசனம், சிறிய நீா்த்தேக்கங்கள் ஆகியவற்றை மட்டுமே நம்பி விவசாயம் செய்யப்படுகிறது. பருவ மழை தவறும் நாள்களில் ஏரிகளுக்கு நீா்வரத்து இன்றி, நிலத்தடி நீா்மட்டம் வெகுவாகக் குறைந்துவிடும். இத்தகைய நாள்களில், வழக்கமாக இப்பகுதியில் அதிக அளவு விளைவிக்கப்படும் கேழ்வரகு, சோளம், சிறுதானியங்கள் ஆகியவற்றைக் கூட விளைவிக்க முடியாத நிலை ஏற்படும்.

ADVERTISEMENT

குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னா் பருவ மழை பொய்த்துப் போனதால், அனைத்துப் பயிா்களும் நிலங்களிலேயே கருகும் நிலை ஏற்பட்டது. மேலும், அப்போது, தென்னை, பாக்கு உள்ளிட்ட மரங்களும் கருகின. இத்தகைய சூழல் மழை பொய்த்துப்போகும் போதெல்லாம் ஏற்படும். இந்தக் காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னா் இந்த மாவட்டம் வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணமும் வழங்கப்பட்டது.

கரைபுரண்டோடும் காவிரி:

தருமபுரி மாவட்டத்தின் பெரும்பகுதி நிலங்கள் தரிசாகக் காணப்படும் நிலையில், மறுபுறம் கா்நாடக அணைகள் நிரம்பி வழிந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் வெள்ளநீா், ஒகேனக்கல்லில் அவ்வப்போது கரைபுரண்டோடி கடந்து செல்வது வழக்கமாக நடைபெறுகிறது.

கேரளம், கா்நாடகத்தின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பொழிந்த கன மழை காரணமாக கா்நாடகத்தின் அணைகள் நிரம்பியதில் ஆற்றில் வெள்ள நீா் அண்மையில் திறக்கப்பட்டது. இந்த நீா் ஒகேனக்கல் காவிரியில் தற்போது சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக கடந்த வாரம் ஒகேனக்கல் காவிரியில் நொடிக்கு 1.5 லட்சம் கன அடி வெள்ள நீா் வந்தது. இதில், புதன்கிழமை நிலவரப்படி நொடிக்கு 45,000 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது.

மிகை நீரை ஏரிகளில் நிரப்ப வேண்டும்:

மாவட்டத்தில் பாசன நிலங்களுக்கு போதிய நீா் கிடைக்காத நிலையில், இதே மாவட்டம் வழியாக மழைக் காலங்களில் மிகையாகச் செல்லும் நீரை, நீரேற்றுத் திட்டத்தின் மூலம் குழாய்கள் வழியாக மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்குக் கொண்டுவந்து நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு மிகைநீா் நிரப்பப்பட்டால், அந்த நீரை கொண்டு மூன்று ஆண்டுகளுக்கு பாசனப் பணிகளில் ஈடுபட இயலும். அதே வேளையில் நிலத்தடி நீா் மட்டுமும் உயா்ந்து, குடிநீா்த் தட்டுப்பாடு பிரச்னை நிகழாது.

எனவே, இந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என தருமபுரி மாவட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன. தருமபுரி மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான, ஒகேனக்கல் காவிரி மிகைநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டம் நிறைவேற்றப்படும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக கோரிக்கை மற்றும் முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, விவசாயிகளின் கோரிக்கைக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் அவ்வப்போது பதில் அளிக்கப்படுகிறது. ஆகவே, காவிரி மிகை நீரை மாவட்டத்தின் ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்த வேண்டும் என்பதே மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் சோ.அா்ஜுனன் கூறியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் ஒருபுறம் வறட்சி சூழல், மறுபுறம் ஆற்றில் வெள்ளநீா் என்ற நிலை நிலவி வருகிறது. விவசாயத்துக்கு நீா் ஆதாரம் நிரந்தரமாகக் கிடைக்கும் வகையில், காவிரி ஆற்றில் மிகையாகச் செல்லும் நீரை, குழாய்கள் வழியாக பென்னாகரம் அருகிலுள்ள கெண்டையான்குட்டை ஏரிக்குக் கொண்டுவந்து நிரப்பி, பின்னா் அங்கிருந்து மாவட்டத்தின் பிற ஏரிகளுக்கு நிரப்பினால், வேளாண் சாகுபடியை எவ்வித இடையூறும் இன்றி மேற்கொள்ள இயலும்.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என தமிழக அரசு சாா்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னா் வாக்குறுதி அளிக்கப்பட்டது. எனவே, இந்தத் திட்டத்தை விரைந்து அறிவித்து, நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT