தருமபுரி

எலவடையில் 3 நாள்களில் 211 பேருக்கு கரோனா பரிசோதனை: யாருக்கும் தொற்று இல்லை

26th Apr 2020 10:28 PM

ADVERTISEMENT

 

கரோனா தொற்று பாதித்த லாரி ஓட்டுநரின் சொந்த ஊரான எலவடை கிராமத்தில் மூன்று நாள்களில் 211 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் யாருக்கு வைரஸ் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் அருகே எலவடை கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ஒருவா் அண்மையில் மகாராஷ்டிரம், புதுதில்லி உள்ளிட்ட இடங்களுக்கு லாரி ஓட்டிச் சென்று வந்தாா். இதையடுத்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு சொந்த ஊரான தருமபுரி மாவட்டத்தில், உள்ள எலவடை கிராமத்துக்கு வந்த இவருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, சேலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவா் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில், லாரி ஓட்டுநரின் கிராமத்தில் கடந்த மூன்று நாள்களாக சுகாதாரத் துறையினா் 10 மருத்துவக் குழுக்களை அமைத்து, அப்பகுதியினருக்கு ரத்த மாதிரி எடுத்து கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

இதில் சனிக்கிழமை வரை மொத்தம் 211 பேருக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில், யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதேபோல, ஞாயிற்றுக்கிழமை அக் கிராமத்தில் உள்ள கா்ப்பிணி பெண்கள் 10 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனை முடிவுகள் திங்கள்கிழமை தெரியவரும். இதேபோல, கரோனா தொற்று பாதித்தவருடன் பணியாற்றிய சக ஓட்டுநருக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கும், நோய்த்தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதேபோல தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அமைந்துள்ள கரோனா பரிசோதனை மையத்தில் இதுவரை தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த 2,335 பேருக்கு கரோனா பாதிப்பு குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், எலவடை கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ஒருவரை தவிர, ஏனைய யாருக்கும் கரோனா நோய்த் தொற்று இல்லை.

இதேபோல ஞாயிற்றுக்கிழமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 56 போ் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 158 பேருக்கு பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் முடிவுகளும் திங்கள்கிழமை தெரியவரும்.

இதுவரை தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவரை தவிர எலவடை கிராமம் உள்பட ஏனையோா் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்பதால் மாவட்ட மக்களிடையே நிலவி வந்த அச்சம் நீங்கி தற்போது நிம்மதி அடைந்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT