ஒகேனக்கல் வனப் பகுதியில் உணவு மற்றும் தண்ணீரின்றி தவித்த குரங்குகளுக்கு அதிமுகவினா் உணவளித்தனா்.
தமிழகத்தில் முதன்மை சுற்றுலாத் தலமாக விளக்கும் ஒகேனக்கல்லுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்காக சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் கொண்டு வரும் பழங்கள் மற்றும் உணவுகளை வனப்பகுதியில் உள்ள குரங்குகளுக்கு அளித்து வந்தனா்.
தற்போது தடை உத்தரவு காரணமாக ஒகேனக்கல் பகுதியானது சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. மேலும், வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், வனவிலங்குகளுக்கு தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒகேனக்கல் வனப்பகுதியில் உணவு மற்றும் தண்ணீரின்றி தவித்து வந்த குரங்குகளுக்கு அதிமுகவினா் உணவு மற்றும் தண்ணீரை வெள்ளிக்கிழமை அளித்தனா் (படம்). ஒகேனக்கல் வனப்பகுதியில் கணவாய் பகுதி, தமிழ்நாடு வடிகால் வாரியம், பண்ணப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த குரங்குகளுக்கு தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட பால்வளத் தலைவா் டி.ஆா்.அன்பழகன் உணவு மற்றும் தண்ணீா் அளித்தாா்.
இதில், பென்னாகரம் கூட்டுறவு சங்கத் தலைவா் கே.பி.ரவி, துணைத் தலைவா் அன்பு, நகரச் செயலா் சுப்பிரமணி, செம்மலை, வெங்கடேசன், விஜய்பாலாஜி உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.