தருமபுரி

பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாத சனிக்கிழமை வழிபாடு

22nd Sep 2019 03:51 AM

ADVERTISEMENT


புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.
கிருஷ்ணகிரியை அடுத்த கணவாய்ப்பட்டி கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் வெங்கட்டரமண சுவாமி கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு சுவாமி அருள் பாலித்தார். 
கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர்.  
தருமபுரி கடைவீதியில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல, தருமபுரி கோட்டையில் உள்ள பரவாசுதேவ பெருமாள் கோயிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாரதனை, பூஜைகள் நடைபெற்றன. மாலையில் பிரகார உத்ஸவம், ஊஞ்சல் சேவை போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. இதேபோல, செட்டிகரை கிராமத்தில் உள்ள சென்றாய பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.   
ஒசூரில்... ஒசூர் அருகே தட்சிண திருப்பதி என்று போற்றப்படும் கோபசந்திரம் ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் சனிக்கிழமை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், மகா தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. 
சிறப்பு அலங்காரத்தில் எழந்தருளிய மூலவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர், உத்ஸவ மூர்த்தி வீதி உலா  நடைபெற்றது. மேலும் பக்தி சொற்பொழிவு, பஜனை ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இக்கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 
இதேபோல், சூளகிரி பிரசன்ன வரதராஜ பெருமாள் ஆலயம் ஒசூர் வெங்கடேஷ் நகரில் உள்ள வெங்கட்ரமண சுவாமி கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும், தேன்கனிக்கோட்டை பேட்டராயசுவாமி திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT