தருமபுரி

காவிரி உபரி நீரை ஏரிகளில் நிரப்ப பா.ம.க. வலியுறுத்தல்

7th Sep 2019 09:58 AM

ADVERTISEMENT

காவிரி உபரி நீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ஒடசல்பட்டி கூட்டுச் சாலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி கிழக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம், கட்சியின் மாவட்டத் தலைவர் ப.மதியழகன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: காவிரி உபரி நீரை ஏரிகளில் நிரப்பக் கோரி, பாமக இளைஞர் அணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், பத்து லட்சத்து இருபது ஆயிரம் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு, அந்த கோரிக்கை மனுக்கள் தமிழக அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளன. எனவே, காவிரி உபரி நீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகளில் நிரப்ப அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், தென்பெண்ணை ஆற்றில் இருந்து நீரேற்றும் திட்டத்தின் வழியாக மொரப்பூர், கம்பைநல்லூர், கடத்தூர், அரூர் வட்டாரப் பகுதியிலுள்ள ஏரிகளை நிரப்ப வேண்டும். வாணியாற்றின் இடதுபுறக் கால்வாயினை நீட்டிக்க வேண்டும்.
அரூர்-சேலம் நெடுஞ்சாலையில் சேதமடைந்துள்ள பகுதிகளை சீரமைக்க வேண்டும். தருமபுரி வள்ளலார் திடலில் செப். 13-ஆம் தேதி நடைபெறும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 80-ஆம் ஆண்டு முத்து விழாவில் தருமபுரி மாவட்டத்திலுள்ள பாமக தொண்டர்கள் அதிகளவில் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
இதில், பாமக  மாநில இணை பொதுச் செயலர் இசக்கி படையாட்சி, மாநில அமைப்புச் செயலர் மீ.க.செல்வகுமார், மாநில துணை பொதுச் செயலர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநிலச் செயலர் இல.வேலுசாமி, கிழக்கு மாவட்டச் செயலர் ரா.அரசாங்கம், இளைஞர் சங்க மாநிலச் செயலர் செந்தில், மாநில செயற்குழு உறுப்பினர் ரா.வணங்காமுடி, பசுமை தாயகம் மாநில துணைச் செயலர் க.மாது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT