தருமபுரி

காய்ச்சல் பாதிப்பு பகுதியில் ஆட்சியர் ஆய்வு: குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுரை  

4th Sep 2019 09:25 AM

ADVERTISEMENT

பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி அறிவுரை வழங்கினார்.
 அரூர் ஊராட்சி ஒன்றியம், எம்.வெளாம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட சுண்டக்காப்பட்டியில் 20 க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, இங்குள்ள மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக புகார் தெரிவித்தனர்.
 இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி, சுண்டக்காப்பட்டியில் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
 இந்த ஆய்வின் போது கிராம மக்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், பருவ மழைக் காலங்களில் கிடைக்கும் குடிநீரை நேரடியாக குடிப்பதால் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். அதேபோல், தற்போது காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பதால், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வழங்கப்படும் குடிநீரில் மழைநீர் கலந்துள்ளது. எனவே, தருமபுரி மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும் வசிக்கும் பொதுமக்கள் குடிநீரைக் காய்ச்சி, ஆறவைத்து குடிக்க வேண்டும்.
 சுண்டக்காப்பட்டி கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் தனி நபர் கழிப்பிட வசதிகள், மகளிர் சுகாதார வளாகங்கள் ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் . வீடு இல்லாதோருக்கு சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள், மத்திய அரசின் தொகுப்பு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குடியிருப்புப் பகுதியிலுள்ள கழிப்பிட கால்வாய்களை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
 ஆய்வின் போது, அரூர் வருவாய் கோட்டாட்சியர் ஜி.புண்ணியக்கோட்டி, வட்டாட்சியர் (பொறுப்பு) தமிழ்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், ஆறுமுகம், கொங்கவேம்பு வட்டார மருத்துவ அலுவலர் அழகரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT