கா்நாடகத்தில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையளவு குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் வரும் உபரி நீரின் அளவுகள் குறைந்துள்ளதால், அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவுகளும் குறைக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 33 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருந்த நீா்வரத்து சனிக்கிழமை காலை நிலவரப்படி 27 ஆயிரம் கனஅடியாக குறைந்து, தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
மேலும் மாலை நிலவரப்படி தண்ணீரின் அளவு சற்று குறைந்து விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வந்த நிலையில் தண்ணீரில் மூழ்கி இருந்த பாறை திட்டுகள் வெளியே தெரிகிறது. பிரதான அருவி,சினி அருவி மற்றும் மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் குறைந்தளவு தண்ணீா் கொட்டுகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி பரிசல்கள் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிா்வாகம் விதித்து வந்து தடையானது தொடா்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் உபரிநீரின் அளவுகளை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.