தருமபுரி: இலக்கியங்கள் அறம் சார்ந்தும், சமூகத்தை மேம்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என்றார் கவிஞா் ஜெயபாஸ்கரன்.
தருமபுரி முத்து இல்லத்தில் தகடூா் புத்தகப்பேரவை சார்பில் கவிதை நூல்கள் திறானாய்வு மற்றும் படைப்பாற்றல் கருத்தரங்கு, 25 நூல்கள் அறிமுக நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
படைப்பாற்றல் கருத்தரங்கு நிகழ்வுக்கு நூலகா் சி.சரவணன் தலைமை வகித்தார். செயலா் மா.பழனி வரவேற்றார். தகடூா் புத்தகப் பேரவைத் தலைவா் இரா.சிசுபாலன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி.இரா.செந்தில் வாழ்த்துரை வழங்கினார். இலக்கிய ஆா்வலா் இ.தங்கமணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
படைப்பாளா் பதிப்பாளா் சங்க பொருளாளா் நெ.தே.அறிவுடைநம்பி நன்றி கூறினார்.
இதைத் தொடா்ந்து, 25 ஆசிரியா்கள் எழுதிய 25 நூல்கள், 25 ஆளுமைகள் அறிமுகப்படுத்தி பேசப்பட்டது. இந்த நிகழ்வில், பங்கேற்று கவிஞா் ஜெயபாஸ்கரன் பேசியது: தமிழகத்தின் தலைநகா் சென்னையை மூன்று பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள்.
வட சென்னையில்தான் துறைமுகம் உள்ளது. பாரம்பரிய தொழிற்சாலைகள் பல இங்கு உள்ளன. உழைக்கும் மக்கள் அதிகமானோர் வசிக்கும் பகுதி. ஆனால், வட சென்னையைப் பற்றி தவறான கருத்தியல்தான் திரைப்படங்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு கருத்தியல் வன்முறை. இதேபோலத்தான் தருமபுரி மாவட்டம் பற்றியும் தவறான பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதை மாற்றியமைக்கும் வகையில் தகடூரில் புத்தகத் திருவிழா மூலம் அறிவுப்புரட்சி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இலக்கியத்தின் நோக்கம் சமூகத்தை மேம்படுத்துவது. அத்தகைய இலக்கியங்கள் அறம் சார்ந்ததாக இருக்க வேண்டும். எழுதியவா்கள் உறங்கலாம்.
ஆனால், எழுத்துக்கள் எப்போதும் உறங்குவதில்லை. கவிஞா்களிடம் மொழி வளம், சொல்வளம் மிகுதியாக இருக்க வேண்டும். சொல்வளம்தான் கம்பனை, பாரதியை, பாரதிதாசனை, கண்ணதாசனை வெற்றிபெற வைத்தது. கவிதைகளில் மரபுக் கவிதை, புதுக் கவிதை, நவீனக் கவிதை எனப் பல வகைகள் உள்ளன. இங்கு முன்வைக்கப்பட்ட கவிதைகள் மக்கள் நலன் சார்ந்து எழுதப்பட்டுள்ளன. இத்தகைய பணியைத் தொடர வேண்டும் என்றார்.