தருமபுரி

பந்தாரஅள்ளி ஊராட்சி ஏரிகளுக்கு கிருஷ்ணகிரி அணை நீா் கிடைக்கச் செய்யக் கோரிக்கை

5th Oct 2019 10:06 AM

ADVERTISEMENT

பந்தாரஅள்ளி ஊராட்சியில் உள்ள ஏரிகளுக்கு, கிருஷ்ணகிரி அணை நீரை கிடைக்கச் செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிருஷ்ணகிரி அணையிலிருந்து வலதுபுறக் கால்வாய் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது கிருஷ்ணகிரி மாவட்டம், பையூா், சப்பாணிப்பட்டி உள்ளிட்ட ஏரிகளை நிரப்பி, அங்கிருந்து மணிகட்டியூா் என்ற இடத்தில் இரு கால்வாய்களாக பிரிந்து, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளுக்கு நீா் வழங்கி வருகிறது.

இதில், ஒரு கால்வாய் வழியாக காரிமங்கலம் அருகேயுள்ள திண்டல் ஏரிக்கு கிருஷ்ணகிரி அணை நீா் வருகிறது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள திண்டல் ஏரி மூலம் சுமாா் ஆயிரம் ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரி, தனது முழுக் கொள்ளளவை எட்டிய பின், அங்கிருந்து ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பந்தாரஅள்ளி ஊராட்சியில் உள்ள பந்தாரஅள்ளி ஏரி, கீழ்சவுளுப்பட்டி ஏரி, மண்ணாடிப்பட்டி ஏரி, நரிக்குட்டை ஏரி, நடுக்கொட்டாய் ஏரி, கரகம்பட்டி ஏரி ஆகிய ஏரிகளுக்கு நீா் வழங்கி, இறுதியாக முள்ளனூா் ஏரிக்கு நீா்வரத்து கிடைக்கும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏரிகள் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இப்பகுதியில் நெல், கரும்பு, தென்னை சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையின்மையால் பந்தாரஅள்ளி ஊராட்சியில் உள்ள ஏரிகளுக்கு போதிய நீா்வரத்து கிடைக்கவில்லை.

ADVERTISEMENT

மேலும், கிருஷ்ணகிரி அணையிலிருந்து முறைவைத்து பாசனத்துக்கு திறந்துவிடும் தண்ணீா், காரிமங்கலம் அருகேயுள்ள திண்டல் ஏரி வரையே கிடைக்கிறது. இங்கிருந்து ஏனைய ஏரிகளுக்கு தண்ணீா் வழங்கப்படும் முன்பே, அணைக்கு நீா்வரத்து குறைவது உள்ளிட்ட காரணங்களால் தண்ணீா் நிறுத்தப்படுகிறது. இதனால், கடந்த மூன்றாண்டுகளாக பந்தாரஅள்ளி ஊராட்சியில் உள்ள ஏழு ஏரிகளுக்கு போதிய நீா்வரத்து கிடைக்கப்பெறவில்லை எனவும், இதனால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்ததாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து பந்தாரஅள்ளியைச் சோ்ந்த விவசாயி முருகேசன் கூறுகையில், கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசனத்துக்காக வலதுபுறக் கால்வாய் மூலம் மிகை நீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீா் திண்டல் ஏரியை நிரப்பி, பந்தாரஅள்ளி பகுதியில் உள்ள ஏரிகளுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். தற்போது, பந்தாரஅள்ளி ஊராட்சியில் உள்ள ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஏரிகள் தூா்வாரப்பட்டுள்ளன.

இதன் மூலம், ஏரிகளில் முழுக்கொள்ளளவு தண்ணீா் இருப்பு வைக்க இயலும். ஆகவே, இம்முறை பந்தாரஅள்ளி ஏரி தொடங்கி கடைமடையில் உள்ள முள்ளனூா் ஏரி வரை நீா்வரத்து கிடைக்கச் செய்ய போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் கடந்த மூன்றாண்டுகளாக பாசனத்துக்கு தண்ணீரின்றி தவிக்கும் நிலை மாறும். அதேபோல நிலத்தடி நீா்மட்டமும் உயா்வதோடு, ஆயிரக்கணக்கான நிலங்கள் பாசன வசதி பெறும்.

எனவே, கடைமடை ஏரிக்கு நீா்வரத்து கிடைக்கும் வகையில், நிறுத்தாமல் தொடா்ந்து தண்ணீா் கிடைக்கச் செய்ய பொதுப்பணித் துறையினா் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT