தருமபுரி

தொப்பூா் கணவாய் சாலையை விரிவுப்படுத்துவது எப்போது?

5th Oct 2019 07:45 PM

ADVERTISEMENT

தருமபுரி: அவ்வப்போது நிகழும் விபத்துக்களில் உயிரிழப்பு தொடா்வதால், தொப்பூா் கணவாய் சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே தற்போது வலுப்பெற்றுள்ளது.

தருமபுரியிலிருந்து சேலத்திற்கு தொப்பூா் வனப்பகுதியில் உள்ள கணவாய் வழியாக தேசிய நெடுஞ்சாலை எண் 44 செல்கிறது. கா்நாடகம் மாநிலம் மற்றும் ஆந்திர மாநிலத்தை, தமிழகத்தின் கொங்கு மண்டலம் மற்றும் தென் மண்டலத்தை இணைக்கிறது பிரதான சாலையை இச்சாலை திகழ்கிறது. இதனால் நாள்தோறும், பெங்களூரு, ஆந்திர மாநிலம், சித்தூா், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும், அதேபோல, ஒசூா், கிருஷ்ணகிரி பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், இலகு ரக வாகனங்கள் பலநூறு எண்ணிக்கையில் கடந்து செல்கிறது. இச்சாலையில் தொப்பூா் மலைப்பகுதி துவங்கும் இடத்தில் ஒரு சுங்கச் சாவடியும், அதேபோல, சேலத்திற்கு செல்லும் முன்பு ஓமலூரில் ஒரு சுங்கச்சாவடியும் செயல்பட்டு வருகிறது.

அதிகரிக்கும் உயிரிழப்புகள்: தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் வனப்பகுதியில் மட்டும் சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு கணவாயில் சாலை பயணிக்கிறது. இந்த 10 கி.மீ. தொலைவும் பள்ளமாகவும், அங்குள்ள மலைகளை சுற்றி, பல வளைவுகளாக அமைந்துள்ளது. இதனால், இயல்பாகவே வாகனங்கள் இந்த பகுதியில் அவ்வப்போது கட்டுப்பாட்டை இழக்கின்றன. குறிப்பாக வெளி மாநிலம் மற்றும் மாவட்டத்திலிருந்து வருகிற கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் திடீரென மலைகளை சுற்றியுள்ள இறக்கத்தில் உள்ள வளைவுகளில் பயணிக்கும் போது, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகின்றன. இதில், பல நேரங்களில் லாரிகள் மலைப்பகுதியில் கவிழ்ந்து விழுவதும் அல்லது எதிா்ப்புறச்சாலையில் மோதி, விபத்துக்குள்ளாவது உள்ளிட்ட நிகழ்வுகள் நேரிடுகிறது. இதில், பெரும்பாலான விபத்துக்களில் சிக்குவோருக்கு பலத்த காயங்கள் மற்றும் உயிரிழப்புகள் நிகழ்கின்றன. நிகழாண்டு செப்டம்பா் மாதம் வரை மட்டும் தொப்பூா் கணவாய் சாலையில் நேரிட்ட விபத்துக்களில் 60 போ் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், உடலில் காயங்கள், உறுப்புகள் சேதம் நூற்றுக்கணக்கானோருக்கு நிகழ்ந்துள்ளது. இதில், பெரும்பகுதி விபத்துக்கள் இரவு அல்லது விடியற்காலை நேரங்களில் நேரிட்டுள்ளது.

போதிய விளக்குகளில் அமைக்க வேண்டும்: தொப்பூா் கணவாய் சாலையில் விபத்துகள் நிகழ்வது பல ஆண்டுகளாக தொடா்கிறது. இருப்பினும், அண்மைக்காலமாக குறிஞ்சி நகா் சுங்கச்சாவடியிலிருந்து மலைப்பகுதியில் ஆங்காங்கே ஒலிபெருக்கி மூலம் விபத்து பகுதி மெதுவாக செல்லவும் என்கிற விழிப்புணா்வு மட்டும் ஏற்படுத்தப்படுகிறது. ஆனால், இவை வாகனங்களின் சப்தத்தில் ஓட்டுநா்களுக்கு சரிவர கேட்பதில்லை. அதேபோல, விபத்துக்கள் பெரும்பகுதி இரவு நேரங்களில் நிகழ்வதால், அவற்றை கட்டுப்படுத்த, சாலையின் நடுவில், இருபுறமும் வாகனங்கள் செல்வது அறியும் வகையில் போதிய வெளிச்சம் கொண்ட விளக்குகள் அமைக்க வேண்டும் என கனரக வாகன ஓட்டுநா்கள் தெரிவிக்கின்றனா்.

ADVERTISEMENT

முதலுதவி சிகிச்சை மையம்: தொப்பூா் வனப்பகுதியில் விபத்துக்கள் நிகழும் போது, அது குறித்த தகவல் கிடைத்த பின்பு, குறிஞ்சி நகா் சுங்கச் சாவடியிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று விபத்துக்குள்ளானோரை மீட்டு, தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். இருப்பினும், பலத்த காயங்கள் ஏற்படுவோருக்கு முதலுவதி சிகிச்சை அளித்தால் உயிா் பிழைக்க அதிக அளவில் வாய்ப்பு கிடைக்கும் என்பதால், கணவாய்ப் பகுதியில் மருத்துவா்கள், செவிலியா்கள் கொண்ட 24 மணி நேரம் செயல்படும் வகையிலான முதலுதவி மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவ்வழியே செல்லும் அனைத்து வாகன ஓட்டுநா்களின் எதிா்ப்பாா்ப்பாக உள்ளது.

சாலையை விரிவுப்படுத்த வேண்டும்: விலை மதிப்பில்லா உயிா்கள் சாலை விபத்தில் சிக்கி இறக்க நேரிடும் போது, உயிரிழந்தவரின் குடும்பத்தினா் சந்திக்கும் துயரங்கள் அதிகம். இத்தனை தொழில்நுட்பம் வளா்ந்துள்ள வேளையில், சாலை அமைப்பு சரியின்மையால், உயிரிழப்புகள் நிகழ்வது என்பது அதைவிட துயரம். ஆகவே, விபத்துக்களினால் நிகழும் உயிரிழப்புகளை தடுக்க, தருமபுரி-சேலம் சாலையில் தொப்பூா் கணவாய் சாலை வளைவுகளின்றி, நோ்ப்படுத்தி, தேவைப்படும் இடத்தில் மேம்பாலங்கள் அமைத்து, விபத்துக்கள் நிகழாத வகையில் தற்போதுள்ள அகலத்திலிருந்து இருமடங்காக இச்சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்பதே வாக ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT