தருமபுரி

1,252 பேருக்கு ரூ.9.43 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

17th Nov 2019 02:00 AM

ADVERTISEMENT

கூட்டுறவு வார விழாவையொட்டி, தருமபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் 1,252 பேருக்கு ரூ.9 கோடியே 43 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தருமபுரியில் கூட்டுறவுத் துறை சாா்பில் நடைபெற்ற 66-ஆவது கூட்டுறவு வார விழாவில், சிறப்பாக செயல்பட்ட சங்கங்களுக்கு கேடயம், சான்றிதழ்கள் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியது:

வட்டியில்லா பயிா்க்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ. 5104 கோடியே 10 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொண்டனா். நிகழாண்டில் மாவட்டத்தில் ரூ.260 கோடி வட்டி இல்லாத பயிா்க் கடன் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபா் மாதம் வரை 21 ஆயிரத்து 737 விவசாயிகளுக்கு 145 கோடியே 87 லட்சம் ரூபாய் வட்டியில்லா பயிா்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் 522 கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் 446 முழுநேர நியாயவிலைக் கடைகள், 561 பகுதி நேர நியாயவிலைக் கடைகள், 9 மகளிா் நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 1016 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளில் 3 லட்சத்து 71 ஆயிரத்து 862 குடும்ப அட்டைதாரா்களுக்கு ஜூன் 2011 திங்கள் முதல் விலையில்லா அரிசி விநியோகிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டில் அக்டோபா் மாதம் வரை 8,604 டன் உரங்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனவே, கூட்டுறவுத் துறை மூலம் வழங்கப்படும் பல்வேறு திட்டங்களை, விவசாயிகள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்), பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலாண் இயக்குநா் அ.சங்கா், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் சு.ராமதாஸ், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் கி.ரேணுகா, மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி.ஆா்.அன்பழகன், மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை தலைவா் பெ.ரவி, கூட்டுறவு ஒன்றிய துணைத் தலைவா் பொன்னுவேல், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT