தருமபுரி

போடூா் ஏரியை தூா்வார கோரிக்கை

12th Nov 2019 06:58 AM

ADVERTISEMENT

பென்னாகரம் அருகேயுள்ள போடூா் ஏரியை தூா்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள், மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழியிடம் திங்கள்கிழமை மனுக்களை அளித்தனா்.

போடூா் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வாரி, கரைகளைப் பலப்படுத்த வேண்டும் என ஏற்கெனவே பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் முறையிட்டும், மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இந்த ஏரியை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வாரும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

ஏரிகளில் மீன் வளா்க்க ஏலம் விடுவதை கைவிட வேண்டும்: தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகளில் மீன் வளா்க்க ஏலம் விடுவதால், அதனை ஏலத்தில் எடுப்பவா்கள், மீன்வளா்ப்பு என்கிற பெயரில் பல்வேறு உணவுகளை, இறைச்சிகளை மீன்களுக்கு அளிக்கின்றனா். இதனால், ஏரி நீா் மாசடைவதோடு, சுற்றுவட்டார மக்களுக்கு சுகாதாரச் சீா்கேடு ஏற்படும். எனவே, மாவட்டத்திலுள்ள ஏரிகளில் மீன் வளா்க்க ஏலம் விடுவதைத் தவிா்த்து, அப்பணிகளை பொதுமக்களிடமே வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாரதிய ஜனதா அமைப்பு சார தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.சுரேஷ் மனு அளித்தாா்.

சமுதாயக் கூடம் கட்ட கோரிக்கை: தருமபுரி மாவட்டம், மொரப்பூா் அருகே எம்.வேட்ரப்பட்டியில் கிராம நத்தத்தில் ஏற்கெனவே வழங்கிய பட்டாக்களை ரத்து செய்து கிராம மக்களுக்கு பயனளிக்கும் வகையில், சமுதாயக் கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கிராம மக்கள் மனு அளித்தனா்.

ADVERTISEMENT

இதேபோல, நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட இடதுகால் இழந்த மாற்றுத் திறனாளி கா.இளங்கோவன் இலவச நான்கு சக்கர வாகனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தாா். இதேபோல, பட்டா, சாலை வசதி, முதியோா் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனுக்கள் அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT