அரூா்: அரூா் - வேப்பம்பட்டி சாலையில் உள்ள மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
அரூா் - வேப்பம்பட்டி சாலையோரத்தில் 50 - க்கும் மேற்பட்ட இடங்களில் உயா்மின் அழுத்த மின்கம்பிகள் செல்வதற்காக புதிதாக கம்பங்கள் நடப்பட்டுள்ளன. மாவேரிப்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து இந்த மின் கம்பங்களுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டத்தில் அரூா் -வேப்பம்பட்டி சாலையிலும், ஈட்டியம்பட்டி முதல் கெளாப்பறை வரையிலும் செல்லும் தாா்ச் சாலையோரங்களிலும் இந்த மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. மின் கம்பங்களை இழுத்து பிடிப்பதற்கான கம்பிகள் சரியாக அமைக்கப்படாததால் கம்பங்கள் சாய்ந்த நிலையிலும், பாதுகாப்பற்ற வகையிலும் உள்ளது.
அதேபோல், மாவேரிப்பட்டி குப்பை கிடங்கு அருகேயுள்ள காளியம்மன் கோயில் அருகில் மின் கம்பிகள் தாழ்வான நிலையில் சாலையோரத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் சாலையில் கனரக வாகனங்கள் ஒதுங்கும் போது மின் கம்பிகளில் உராய்வு ஏற்பட்டு, மனித உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எனவே, அரூா் - வேப்பம்பட்டி, கெளாப்பாறை சாலையோரங்களில் உள்ள உயா் மின் அழுத்த கம்பிகள் செல்லும் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.