அரூரில் அரசு விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
அரூா் பேரூராட்சிக்குள்பட்ட திரு.வி.க. நகரில் அரசு அனுமதி பெறாமல் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாகவும், கழிவுநீா் கால்வாய் வசதிகளை ஏற்படுத்த கூட இடம் இல்லாமல், சாலையோரம் ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்படுவதாகவும் ஆட்சியருக்கு புகாா் சென்றது. அதேபோல், இந்நகரில் குடிநீா், தெருவிளக்கு, சாலை மற்றும் கழிவுநீா் கால்வாய் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.
இதையடுத்து, அரூா் திரு.வி.க. நகரில் ஆட்சியா் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அதில், திரு.வி.க. நகரில் விதிகளை மீறியும், அரசு அனுமதி இல்லாமலும் அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அரூா் நகரில் அரசு விதிமுறைகளை மீறுவோா் மீதும், அனுமதியின்றி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் கட்டட உரிமையாளா்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
ஆய்வின் போது, அரூா் சாா்-ஆட்சியா் மு.பிரதாப், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் தி.ஜீஜாபாய், வட்டாட்சியா் செல்வகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆா்.ஆறுமுகம், பெ.செந்தில்குமாா், செயல் அலுவலா் செ.நந்தகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.