படைப்புழுவால் தாக்கப்பட்ட மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டட கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் ஆட்சியர் சு. மலர்விழி தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், விவசாய மின் இணைப்புக்காக பதிவு செய்து நீண்ட காலமாக காத்திருப்போருக்கு விரைந்து மின் இணைப்பு வழங்க வேண்டும். மக்காச் சோள சாகுபடியில் ஈடுபட்டு அமெரிக்கன் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவாக நிவாரணம் வழங்கிட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் அனைத்து ஏரிகளிலும் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தருமபுரியை வறட்சி மாவட்டமாக அறிவித்து நீண்ட காலமாகியும் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, நிவாரணத்தை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். இதைத் தொடர்ந்து, பென்னாகரம், பாலக்கோடு பகுதிகளில் விளைநிலங்களில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் குழாய் பதித்தல் உள்ள திட்டத்தை கைவிட்டு, மாற்று வழியில் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி, நூற்றுக்கணக்கான விவசாயிகள் குழுவாகத் திரண்டு வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது தொடர்பாக, மாவட்ட வறட்சி பாதிப்புக்கான நிவாரணம் பெறும் வகையில் அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்படும். விளைநிலங்கள் வழியாக பாரத் பெட்ரோலியம் நிறுவனம் எரிவாயு குழாய் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்கிற விவசாயிகளின் கோரிக்கை குறித்துஅரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் என ஆட்சியர் சு. மலர்விழி பதிலளித்துப் பேசினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் எச். ரஹமத்துல்லா கான், சார் ஆட்சியர் ம.ப.சிவன் அருள், வேளாண் இணை இயக்குநர் (பொ) கைலாசபதி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்) இளங்கோவன், தோட்டக்கலை துணை இயக்குநர் சீனிவாசன், முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பா.ச. சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.