அரூரை அடுத்த எருமியாம்பட்டி இ.ஆர்.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 8-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் இ.ஆர்.கே. கல்வி நிறுவனங்களின் தாளாளர் இ.ஆர். செல்வராஜ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் த. சக்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் ம. மணிவண்ணன் பேசியதாவது:
நாட்டில் கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் மகளிர் அதிக அளவில் உயர் கல்விப் பெறுகின்றனர். ஆனால், தமிழகத்தில் மகளிருக்கு உயர் கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும் அதனை மகளிர் பயன்படுத்திக் கொள்வதில்லை. எனவே, பட்டப் படிப்புகளை முடிக்கும் மகளிர் அனைவரும் உயர்கல்வியை கற்க வேண்டும். கணினி, செல்லிடப்பேசிகள் உள்ளிட்ட நவீன தொழில் நுட்பங்களை வாழ்க்கையின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து, இ.ஆர்.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை, முதுகலை, ஆய்வில் நிறைஞர் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற 608 மாணவ, மாணவியருக்குப் பட்டங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அவர் வழங்கினார். விழாவில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற முதுகலை கணிதவியல் மாணவி எஸ். ஆனந்திக்கு ரூ. 50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதேபோல், கல்லூரி மாணவிகள் எம்.மணிமொழி, எம்.கனிமொழி, ஜெ.சுவாதி, கே.ஐஸ்வர்யா, எஸ்.ரோஜா, எஸ்.மேகலா, எஸ்.நளினி தேவி, ஏ.ஆக்பரின் ஆகியோருக்கு தலா ரூ. 10 ஆயிரம் ஊக்கத் தொகைகள் இ.ஆர்.கே கல்வி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டன.
இதில், இ.ஆர்.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிர்வாக அலுவலர் சி.அருள்குமார், யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலர் தமிழரசன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.