தருமபுரி

லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தல்

22nd Jul 2019 10:47 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு உள்ள இடங்களில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்க வேண்டும் என தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 
 தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க பேரவைக் கூட்டம், தருமபுரியில் ஒன்றியத் தலைவர் ராஜகோபால் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் வறட்சியின் காரணமாக குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, வறட்சி பாதித்த கிராமங்களில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகளை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தூர்வார வேண்டும்.
வறட்சியால் காய்ந்துபோன தென்னை மரங்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். அதகப்பாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். வீடுகளில் தனி நபர் கழிப்பிட கட்டடம் அமைக்க ரூ. 25 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
வத்தல்மலையில் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர் ஆகியோர் தங்கி பணிபுரிய வேண்டும்.  தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர்- ஆசிரியர் கழக அமைப்புகளை உருவாக்கி, நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
இதில்,  சங்க மாவட்டச் செயலர் ஜெ.பிரதாபன், ஒன்றியச் செயலர் ஜி.பச்சாகவுண்டர், பொருளர் எம்.முன்னு, மாவட்ட துணைச் செயலர்கள் என்.பி.ராஜி, மாணிக்கம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எம்.சாக்கன், எல்.சி.கிருஷ்ணன், மாதையன், பி.முருகன், மாவட்ட குழு உறுப்பினர்கள் லட்சுமணன், மாணிக்கம், லட்சுமி மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT