கூட்டுறவு கடன் சங்கத்தில்ரூ. 90.77 லட்சம் கையாடல் செய்த வழக்கில், செயலர் உள்பட மூவரை வணிக குற்றப்பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம், கே.கே.73 ஒட்டஹள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2012 முதல் 2017 வரையிலான காலத்தில் சங்கச் செயலராக சங்கர், முதுநிலை எழுத்தராக பழனி, எழுத்தராக முருகன் ஆகியோர் பணியாற்றினர்.
அப்போது, அவர்கள் மூவரும் கூட்டாகச் சேர்ந்து சங்க உறுப்பினர்களின் சேமிப்புக் கணக்குகளில் இருந்து இட்டு வைப்புத்தொகை இல்லாத நிலையில், போலியான பதிவுகளை தயார் செய்து, அதன் மூலம் மத்திய கூட்டுறவு வங்கியின் சங்க சேமிப்புக் கணக்குகளில் இருந்து சங்கப் பணம் ரூ. 90 லட்சத்து 77 ஆயிரத்து 966 கையாடல் செய்துள்ளனர்.
இதுகுறித்து தருமபுரி கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் ரவிச்சந்திரன், வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவில் புகார் செய்தார். அதன்பேரில், வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் கவிதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் பணம் கையாடல் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, பணம் கையாடல் செய்த கூட்டுறவு சங்கச் செயலர் சங்கர் மற்றும் பழனி, முருகன் ஆகியோரை போலீஸார் கைது செய்தார். மேலும், மூவரும் தருமபுரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-இல் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.