தருமபுரி

காவலர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும்: ஏடிஜிபி அசோக்குமார் தாஸ்

6th Jul 2019 09:37 AM

ADVERTISEMENT

புதிதாக பணியைத் தொடங்க உள்ள காவலர்கள் அர்ப்பணிப்போடு மக்கள் பணியாற்ற வேண்டும் என ஏடிஜிபி அசோக்குமார் தாஸ் கேட்டுக் கொண்டார்.
தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சிப் பள்ளியில் 186 பேர் கடந்த 2018 டிச. 2-ஆம் தேதி முதல் பயிற்சி பெற்று வந்தனர்.  இவர்களது பயிற்சி வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.  அதைத் தொடர்ந்து, இப் புதிய காவலர்கள், பயிற்சியிலிருந்து பணிக்கு திரும்பும் விழா நடைபெற்றது.  விழாவுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.ராஜன் தலைமை வகித்துப் பேசினார்.
    இதில், பயிற்சியாளர்களுக்கு நற்சான்று வழங்கியும்,  பயிற்சி நிறைவு செய்து பணியில் சேர உள்ள காவலர்களை வாழ்த்தியும்,  கூடுதல் காவல் துறை இயக்குநர் (தொழில்நுட்ப சேவை) அசோக்குமார் தாஸ் பேசியது:  தருமபுரி காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற உங்களுக்கு மிக சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.  
இப் பயிற்சி உங்களது வாழ்க்கையை மாற்றியமைக்கும்.  காவலர் பணியினைத் தொடங்க உள்ள உங்களுக்கு இந்த சமூகத்தையும், அனைத்துத் தரப்பு மக்களையும் காக்கும் கடமை இருக்கிறது.  ஆகவே, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும், இச் சமூகத்துக்கும் காவலர்களாகப் பணியாற்ற வேண்டும்.
    காவல் துறையில் எவ்வித உயர் பதவிகளை வகித்தாலும்,  பாகுபடின்றி மக்கள் சேவையாற்ற வேண்டும்.  தற்போது பயிற்சி பெற்றவர்களில்,  பொறியியல், பட்டம் உள்ளிட்ட உயர்கல்வி பயின்றவர்கள் உள்ளனர்.  தங்களது கல்வி அறிவை காவல் பணிக்குப் பயன்படுத்தி,  முழு ஈடுபாட்டோடு அர்ப்பணிப்புடன் இத் துறையில் மக்கள் பணியாற்ற வேண்டும் என்றார்.
விழாவில்,  மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி, காவலர் பயிற்சிப் பள்ளி துணை முதல்வர் டிஎஸ்பி மணிகண்டன்,  ஆயுதப்படை டிஎஸ்பி சொக்கையா மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, ஆயுதப்படை மைதானத்தில் ஏடிஜிபி அசோக்குமார் தாஸ் மரக்கன்றுகளை நட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT