தருமபுரி

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு நாளை தொடக்கம்

4th Jul 2019 09:45 AM

ADVERTISEMENT

தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 5-ஆம் தேதி தொடங்கி வருகிற ஜூலை 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இது குறித்து, தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் கா. ரவி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு வருகின்ற ஜூலை 5 முதல் 11 வரை கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
கலந்தாய்வு நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்களை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி கொண்டு இணையதள முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் செல்லிடப்பேசிக்கு கலந்தாய்வுக்கான தேதி, நேரம், இடம் ஆகியன குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தருமபுரி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இதன் விவரம் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
முதல் நாளான ஜூலை 5 ஆம் தேதி காலை 9 மணிக்கு எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு சிறப்பு பிரிவினருக்கும், அன்றைய தினம் பிற்பகல் 1 மணிக்கு எட்டாம் வகுப்பு பொதுப் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும்.
ஜூலை 6 முதல் 11 வரை பத்தாம் வகுப்பு பொதுப் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வில் கலந்துகொள்ளும் நபர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் அசல் மற்றும் இரண்டு நகல்களும் ரூ. 50 வங்கியில் செலுத்தியதற்கான செலுத்து சீட்டு, முன்னுரிமை பெற்றவர் எனில் அதற்கான அசல் சான்றிதழ் ஆகியவற்றுடன் 10 புகைப்பட நகல்கள் மற்றும் வண்ண புகைப்படம் ஒட்டிய கையொப்பமிட்ட இணையதள விண்ணப்ப நகல் கொண்டு வருதல் வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் விண்ணப்பித்தோர் கலந்தாய்வில் பெற்றோர் கலந்துகொள்ள விண்ணப்பதாரரின் அனுமதி கடிதம் கொண்டு வருதல் வேண்டும். பயிற்சியில் சேரும் மாணவர்கள் சேர்க்கை கட்டணமாக காப்புத்தொகை கட்டணம் ரூ. 100, விளையாட்டு கட்டணம் ரூ. 10, பதிவுக் கட்டணம் ரூ. 25, சான்றிதழ் சரிபார்ப்பு கட்டணம் ரூ. 50 (ஒரு சான்றிழுக்கு) சமர்பிக்க வேண்டும்.
கலந்தாய்வின்போது, அசல் சான்றிதழ்கள் சமர்பிக்காவிடில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். பழங்குடி இன மக்கள் வருவாய்க் கோட்டாட்சியரிடமிருந்து ஜாதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதர இனத்தவருக்கு வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியரால் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT